UPDATED : நவ 11, 2011 12:00 AM
ADDED : நவ 11, 2011 12:06 PM
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அவர் கூறியதாவது :மாநில அரசுகளுடன் இணைந்து, நாடு முழுவதும், 300 புதிய பாலிடெக்னிக் கல்லூரிகளைத் துவங்க, அகில இந்திய தொழில் கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதில், ஒவ்வொரு கல்லூரிக்கும், ஏ.ஐ.சி.டி.இ., 3 கோடி ரூபாயும், மாநில அரசு 3 கோடி ரூபாயும் அளிக்கும். அந்தந்தப் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, இக்கல்லூரிகளில் படிப்புகள் துவங்கப்படும்.
தமிழகத்தில், புதிதாக தனியார் பொறியியல் கல்லூரிகளைத் துவங்க அனுமதி கொடுப்பது குறித்து, மாநில அரசிடம் கருத்துக் கேட்டு கடிதம் எழுதினோம். ஆனால், இதுவரை எந்தப் பதிலும் இல்லை. வரும் கல்வியாண்டுக்கு, நாடு முழுவதும் 40 புதிய பொறியியல் கல்லூரிகளைத் துவக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
இதுதவிர, அனுமதியைப் புதுப்பித்துக் கொள்ளவும், புதிய படிப்புகளுக்கு அனுமதி கோரியும் 4,000 கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன. இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடைமுறை, வரும் ஜனவரி 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கும். வரும், ஜனவரி 31ம் தேதி, நாடு முழுவதும் எத்தனை பொறியியல் கல்லூரிகள் உள்ளன என்பது தெரியவரும்.
சிறந்த 50 பொறியியல் கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்து, அங்கு தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும். பொறியியல் கல்லூரிகளில் நன்கொடை மற்றும் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவித்தால், அந்த புகார் குறித்து விசாரிக்கப்படும்.
புகார் நிரூபிக்கப்பட்டால், கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். ராகிங் குறித்து, ஏ.ஐ.சி.டி.இ., இணையதளம் மூலம் புகார் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, மாந்தா கூறினார்.
