ஆசிரியர்களே என்னை மேம்படுத்தினர்: கல்வி அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி
ஆசிரியர்களே என்னை மேம்படுத்தினர்: கல்வி அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி
UPDATED : மே 20, 2026 10:42 AM
ADDED : மே 20, 2026 10:43 AM
சென்னை:
“கற்றல் குறைபாடு உள்ள, 'ஸ்லோ லேர்னர்'களை ஒதுக்கி விடாமல், அவர்களை ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளாக நினைத்து, மற்ற திறமைகளை கண்டறிந்து மேம்படுத்த வேண்டும். நானும் ஒரு 'ஸ்லோ லேர்னர்' தான். என்னை ஆசிரியர்கள் தான் மேம்படுத்தினர்,” என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
தமிழகத்தில், முதல் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை, இந்த ஆண்டு புதிய பாடப்புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ள பயிற்றுநர்களுக்கான மூன்று நாள் பயிற்சியை, அமைச்சர் ராஜ்மோகன், சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.
அவர் அளித்த பேட்டி:
முதல் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை புதிய பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை, ஆசிரியர்களிடம் முறையாக அறிமுகம் செய்ய உள்ள பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு பாடத்தையும் எவ்வாறு அணுக வேண்டும். என்னென்ன துணைப் பொருட்களை வைத்து மாணவர்களுக்கு பாடங்களை விளக்க வேண்டும் என்பது குறித்து விளக்கப்படும்.
தமிழகத்தில், அரசு பள்ளிகள் எண்ணிக்கையில் அதிகம் இருந்தாலும், மாணவர்கள் தனியார் பள்ளிகளில் அதிகம் படிக்கின்றனர். இந்த இடைவெளியை குறைத்து, அரசு பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே போல், கற்றல் குறைபாடு உள்ள, 'ஸ்லோ லேர்னர்'களை ஒதுக்கிவிடாமல், அவர்களை தங்கள் குழந்தைகளாக நினைத்து, அவர்களின் மற்ற திறமைகளைக் கண்டறிந்து ஆசிரியர்கள் மேம்படுத்த வேண்டும்.
நானும் ஒரு 'ஸ்லோ லேர்னர்' தான்; என்னை ஆசிரியர்கள் தான் மேம்படுத்தினர். மத்திய அரசின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், கொள்கையில் சமரசமில்லாமல், தமிழக மாணவர்களுக்கான, மத்திய அரசின் கல்வி நிதியை பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
