'வளர்ந்த இந்தியாவை அடைய கடமையை சரியாக செய்யுங்கள்'
'வளர்ந்த இந்தியாவை அடைய கடமையை சரியாக செய்யுங்கள்'
UPDATED : அக் 30, 2024 12:00 AM
ADDED : அக் 30, 2024 12:55 PM
கோவை:
வளர்ந்த இந்தியா என்ற பிரதமர் மோடியின் கனவை நனவாக்க, இளைஞர்கள் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும் என மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பேசினார்.
நாடு முழுதும் 40 வெவ்வேறு இடங்களில் ரோஜ்கர் மேளா நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி, காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்றார். மத்திய அரசுத் துறைகளில் புதிதாக பணியமர்த்தப்பட்ட 51 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு, பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை, ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பேசியதாவது:
நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின் நடக்கும், 10வது ரோஜ்கர் மேளா இது. பல்வேறு துறைகளில் முன்பிருந்த சுணக்கங்களைத் தாண்டி, நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்கிறார் பிரதமர். பலவீனமான துறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அமைச்சரவை உட்பட அனைத்துத் துறைகளிலும், இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறார்.
தேவையற்ற சட்டங்களை நீக்குதல், தேவையான சட்ட விதிகளை புகுத்துதல் என சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். வரும் 2047க்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி, அவர் பயணித்து வருகிறார். இளைஞர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்தால், பிரதமரின் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நம்மால் நிச்சயம் அடைய இயலும். இது உங்களுக்கான வேலை அல்ல, நாட்டுக்கான சேவை.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், பல்வேறு மத்திய அரசு துறைகளில், 191 பேருக்கு பணியாணைகள் வழங்கப்பட்டன.
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், கோவை அஞ்சலக தலைமை இயக்குனர் சரவணன், திருச்சி சுங்கத்துறை தலைமை கமிஷனர் விமலநாதன், ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி உட்பட பலர் பங்கேற்றனர்.