'பதில் சொல்; பரிசை வெல்' பட்டம் வினாடி வினா; 'டக் டக்'கென பதில் அளித்து மாணவர்கள் அசத்தல்
'பதில் சொல்; பரிசை வெல்' பட்டம் வினாடி வினா; 'டக் டக்'கென பதில் அளித்து மாணவர்கள் அசத்தல்
UPDATED : அக் 31, 2026 02:22 PM
ADDED : அக் 31, 2026 02:23 PM
கோவை:
'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி சார்பில், 'பதில் சொல்; பரிசை வெல்' எனும் மெகா வினாடி வினா போட்டி, காரமடை, எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
கூகுளை தட்டினால் அத்தனை தகவல்களும் கிடைக்கும் என்றாலும், வாசிப்பு தரும் அனுபவம் அலாதியானது. ஒருமுறை கண்களால் பார்த்து, விரல் வைத்து வாசித்து, கற்பனையில் உருவம் கொடுத்து, நினைவுப்படுத்தினால், காலம் முழுக்க மறக்காது.
இந்த அனுபவத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்த, 'தினமலர்' நாளிதழ் பட்டம் மாணவர் பதிப்பு வெளியிடுகிறது. ஆர்வமாக இந்த இதழை படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்க, வினாடி வினா போட்டி நடத்தப்படுகிறது.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று, பொது அறிவுத்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். பள்ளி அளவிலான சுற்றில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுகின்றன.
இறுதி போட்டியில் வெற்றி பெறுவோருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும். இப்போட்டிக்கு, சத்யா ஏஜென்சீஸ், ஸ்போர்ட்ஸ் ஹப் ஆகிய நிறுவனங்கள் பரிசுப்பொருட்களை வழங்கும் பங்களிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.
அரையிறுதி தகுதி சுற்று போட்டி, காரமடை, எஸ்.என்.ஆர்.வி., நகரில் உள்ள எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. 40 மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், அதிக மதிப்பெண் பெற்ற 16 பேர், 8 அணிகளாக பிரிக்கப்பட்டனர்.
பள்ளி அளவிலான இறுதி போட்டி, மூன்று சுற்றுகளாக நடந்தது. இதில், 'டி' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு 'ஆ' பிரிவை சேர்ந்த மாணவர்களான தன்யா மற்றும் தமிழ்மதி ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
இறுதிப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்கள், சான்றிதழ்களை, பள்ளி தலைமையாசிரியை சரஸ்வதி வழங்கி பாராட்டினார்.
