'பட்டம்' படித்தால் கட்டாயம் பரிசு போட்டியில் அசத்திய மாணவர்கள்
'பட்டம்' படித்தால் கட்டாயம் பரிசு போட்டியில் அசத்திய மாணவர்கள்
UPDATED : அக் 31, 2026 02:21 PM
ADDED : அக் 31, 2026 02:22 PM
கோவை:
'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரி சார்பில், 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற மெகா வினாடிவினா போட்டி, வேடப்பட்டி, பி.எஸ்.ஜி., உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி, மாணவர் மத்தியில் பொது அறிவை வளர்க்கும் நோக்கில், பட்டம் மாணவர் பதிப்பு வெளியிடப்படுகிறது. வாசிக்கும் மாணவர்களை ஊக்குவிக்க, 2018 முதல், வினாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள். போட்டியில் பங்கேற்று, தங்களின் பொது அறிவுத்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். பள்ளி அளவிலான சுற்றில் வெற்றி பெறும் அணிகள் , அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுகின்றன. இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு சிறப்புபரிசு வழங்கப்படும்.
அரையிறுதி தகுதி சுற்றுக்கான போட்டி, நேற்று வேடப்பட்டி, தொண்டாமுத்துார் ரோட்டில் உள்ள, பி.எஸ்.ஜி., உயர்நிலை பள்ளியில் நடந்தது. 105 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 பேர், எட்டு அணிகளாக பிரித்து, பள்ளி அளவிலான இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
மூன்று சுற்றாக நடந்த போட்டியில், 'சி' அணியின் எட்டாம் வகுப்பு மாணவர் ஹரீஷ், ஒன்பதாம் வகுப்பு மாணவி கார்திகா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். இறுதிப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்கள், சான்றிதழ்களை, பள்ளி தலைமையாசிரியை பரிமளா வழங்கினார்.
இப்போட்டிக்கு, சத்யா ஏஜென்சீஸ், ஸ்போர்ட்ஸ் ஹப் ஆகிய நிறுவனங்கள் பரிசுகளை வழங்கும் பங்களிப்பாளராக இணைந்திருந்தன.
