பாரதியார் பல்கலையின் தாமத தேர்வு அறிவிப்பால் மாணவர்கள் தவிப்பு
பாரதியார் பல்கலையின் தாமத தேர்வு அறிவிப்பால் மாணவர்கள் தவிப்பு
UPDATED : அக் 31, 2026 02:20 PM
ADDED : அக் 31, 2026 02:21 PM
கோவை:
பாரதியார் பல்கலை தொலைதுார கல்வி மையத்தில் படிக்கும் முதுகலை மாணவர்களுக்கு, தேர்வு அறிவிப்பு, பாடப்புத்தகம் வழங்குவதில் தாமதம் நீடிக்கிறது.
பாரதியார் பல்கலை தொலைதுார கல்வி மையம், 15 க்கும் மேற்பட்ட முதுகலை படிப்புகளை வழங்குகிறது. 1,800 பேர் படிக்கின்றனர். வார இறுதி நாட்களில் வகுப்புகள் நடக்கின்றன. 2024 - 2026 பேட்ச் மாணவர்களுக்கு, துவக்கத்தில் இருந்தே முறையாக வகுப்புகள் எடுப்பதில்லை என்ற புகார் உள்ளது.
மூன்றாவது செமஸ்டர் தேர்வுக்கு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இனியும் புத்தகங்கள் வழங்கவில்லை. செலுத்திய பணத்தை திரும்ப பெற மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாடப்புத்தகம் இல்லாமல் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் நீடிப்பதாக மாணவர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து, மெயிலில் இ-புத்தகம் பகிரப்பட்டுள்ளது. இந்த செமஸ்டர் தேர்வு அக்., இறுதிக்குள் நடத்தி முடித்திருக்க வேண்டும். ஆனால், தற்போது தான் தேர்வு அறிவிப்பையே வெளியிட்டுள்ளனர்.
மாணவர்கள் கூறுகையில், “உரிய கால இடைவெளியில் தேர்வு நடத்தாமல் இழுத்தடிப்பதால், இரண்டாண்டுகளில் படிப்பு முடிக்க முடியுமா என தெரியவில்லை. நவ., டிச., மாதத்தில் தேர்வு நடத்துவதாக, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தேர்வுக் கட்டணம் இணையதளத்தில் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு பிறகு தான், இ-புத்தகத்தை மெயிலில் அனுப்பியுள்ளனர்.
வகுப்புகளில் எடுத்த நோட்ஸ் வைத்து, சப்போர்ட்டிவ் டாக்குமென்ட் இல்லாமல் எப்படி தேர்வுக்கு தயாராக முடியும். தொலைதுார கல்வி மையத்தின் மீது, பல்கலைக்கு எந்த அக்கறையும் இல்லை” என்றனர்.
பதிவாளர் ராஜவேல் கூறுகையில், “வழக்கமாக அக்., இறுதியில் தான் தேர்வு அறிவிக்கப்படும். மாணவர்களுக்கு பாடப்புத்தகம் கிடைக்காதது பற்றி, தொலைதுார கல்வி மைய இயக்குனரகத்தில் தான் கேட்க வேண்டும்,” என்றார்.
