UPDATED : ஜூன் 14, 2024 12:00 AM
ADDED : ஜூன் 14, 2024 09:45 AM
சென்னை:
மாணவர் விசா தினமான நேற்று மட்டும், 3,900 இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க துாதரகம் விசா வழங்கியது.
கடந்த எட்டாண்டுகளாக, ஜூன் 13ம் தேதியை மாணவர் விசா தினமாக, அமெரிக்க துாதரகம் கொண்டாடி வருகிறது. அந்த வகையில், நேற்று இந்தியாவில் உள்ள அமெரிக்க துணை துாதரகங்களில் விசாவுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், அதிகளவில் அழைக்கப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது.
அவர்களில், 3,900 பேருக்கு உடனடியாக மாணவர் விசா வழங்க ஒப்புதலும் வழங்கப்பட்டது. சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில், துாதரக பணியாளர்களும், எஜுகேஷன் யு.எஸ்.ஏ., அமைப்பு பணியாளர்களும் ஒருங்கிணைத்தனர்.
இந்தாண்டு அமெரிக்காவில் படிக்க விண்ணப்பித்தோரில், இந்திய மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க, அமெரிக்க அரசு அறிவுறுத்தி உள்ளதாலும், இது இந்திய - அமெரிக்க உறவை வலுப்படுத்தும் என்பதாலும், அமெரிக்காவில் அதிகளவு இந்தியர்கள் இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் படிக்க தயாராகும் மாணவர்கள், bit.ly/EdUSAIndiaPDO24 என்ற இணையதள இணைப்பை பார்வையிடும்படி, துாதரகம் அறிவுறுத்தி உள்ளது.

