''கல்வியும் வேலை வாய்ப்புகளும் சமூக முன்னேற்றத்தின் துாண்கள்''
''கல்வியும் வேலை வாய்ப்புகளும் சமூக முன்னேற்றத்தின் துாண்கள்''
UPDATED : ஜன 24, 2026 04:43 PM
ADDED : ஜன 24, 2026 04:45 PM

ஒட்டன்சத்திரம்:
“கல்வியும் வேலைவாய்ப்புகளும் சமூக முன்னேற்றத்தின் முக்கிய துாண்களாகும்” என லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வி. ராமராஜ் தெரிவித்தார்.
ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டியில் உள்ள தமிழக அரசின் ஒருங்கிணைந்த போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் 'வெற்றிக்கு விதி செய்வோம்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
மாணவர்களுக்கான கல்வியும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளும் சமூக முன்னேற்றத்தின் இரண்டு துாண்கள். எதிர்வரும் காலங்களில் எந்த துறைகளில் எத்தகைய வேலை வாய்ப்புகள் அதிகம் உருவாகின்றன என்பதை முன்கூட்டியே கணித்து அதற்கேற்றவாறு பட்டதாரிகளை பல்கலைக்கழகம், கல்லுாரிகள் மூலம் உருவாக்கும் நடைமுறை வெளிநாடுகளில் இருந்து வருகின்றன.
இதன் மூலம் பட்டம் பெற்றவர்களிடையே வேலையில்லா திண்டாட்டத்தை தவிர்க்க இயலும் என்று பல நாடுகள் கருதுகின்றன. இது போன்ற நடைமுறையை இந்தியாவில் அமல்படுத்த வேண்டும்.
1956 ல் நாடு முழுவதும் 14 கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மத்திய அரசால் உருவாக்கப்பட்டன. அவற்றில் காந்திகிராமம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டு மாணவர்களும் தமிழகத்தை சார்ந்த கிராம மாணவர்களும் இங்கு படித்து வருகிறார்கள்.
நிகர்நிலை பல்கலைக்கழகமாக உள்ள காந்திகிராம பல்கலையை மத்திய அரசு பல்கலைக்கழகமாக தரம் உயர்த்துவதன் மூலம் திண்டுக்கல் மாவட்ட மாணவர்களும் மற்றவர்களும் அதிக பயனை பெறுவார்கள் என்றார். தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் வி.பி.ஆர்., இளம்பரிதி கலந்து கொண்டார்.

