'25 ஏக்கர் நிலம் இருந்தால் தனியார் பல்கலை அமைக்கலாம்'
'25 ஏக்கர் நிலம் இருந்தால் தனியார் பல்கலை அமைக்கலாம்'
UPDATED : அக் 16, 2025 03:48 PM
ADDED : அக் 16, 2025 03:50 PM

சென்னை:
மாநகராட்சி பகுதிக்குள் 25 ஏக்கர் நிலம் இருந்தால், தனியார் பல்கலை அமைக்க வகை செய்யும் சட்ட மசோதாவை, சட்டசபையில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 2019 தமிழ்நாடு தனியார் பல்கலை சட்டம், தற்போதுள்ள கல்வி நிறுவனங்களை கருத்தில் கொள்ளாமல், புதிதாக தனியார் பல்கலை அமைக்க வகை செய்கிறது.
கற்பித்தல், ஆராய்ச்சி, தேர்வு, விரிவாக்க பணிகளுக்கு, உலகளாவிய பல்கலைகளுடன் இணைந்து, புதிய பாடப்பிரிவுகளை துவங்க, தமிழகத்தில் உள்ள தனியார் கல்லுாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
தமிழகத்தில் தனியார் பல்கலை அமைக்க, 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் தேவைப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு, 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் கிடைப்பது கடினம்.
எனவே, மாநகராட்சி பகுதிகளில் 25 ஏக்கர், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 30 ஏக்கர், மற்ற பகுதிகளில் 50 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் இருந்தால், தனியார் பல்கலை துவங்க வகை செய்யும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மாணவர்கள் நலனுக்காகவும், உயர் கல்வியை மேம்படுத்தவும் இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஓய்வூதிய உயர்வுக்கு சட்டம்
'முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கான ஓய்வூதியம், 30,000 ரூபாயிலிருந்து 35,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்' என, கடந்த ஏப்ரல் 25ம் தேதி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் சட்ட மசோதாவை, சபை முன்னவர் துரைமுருகன் தாக்கல் செய்தார்.