UPDATED : அக் 16, 2025 03:50 PM
ADDED : அக் 16, 2025 03:54 PM

சென்னை:
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படித்து, 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான இடம்பெயர்வு சான்றுகள் இனி, 'டிஜிட்டல்' ஆவணங்களாக மட்டுமே வழங்கப்பட உள்ளன.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், தங்களின் படிப்பை முடித்த பின், வேறு கல்வி நிறுவனங்களில் சேர, இடம்பெயர்வு சான்றிதழ் எனும், 'மைக்ரேஷன் சர்டிபிகேட்'களை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த சான்றிதழை, இனி காகித வடிவில் வழங்கப் போவதில்லை என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. அதேநேரம், இடம்பெயர்வு சான்றிதழ்கள் தேவைப்படுவோர், 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பித்து, 'டிஜி லாக்கர்' செயலியின் வாயிலாக, டிஜிட்டல் ஆவணத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
இந்த ஆவணங்களின் உண்மைத் தன்மையை பரிசோதிப்பதும், எல்லா இடங்களிலும் கையாள்வதும் எளிது என்பதால், சி.பி.எஸ்.இ., இந்த முடிவை எடுத்துள்ளது.
கட்டாயமாக காகித நகல் தேவைப்படுவோர், சி.பி.எஸ்.இ.,யின் 'டூப்ளிகேட் அகாடமிக் டாகுமென்ட் சிஸ்டம்' எனும் பிரிவில் உள்ள cbseit.in/cbse/web/dads/List.aspx என்ற இணையதள இணைப்பின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
என்னென்ன பலன்?
மத்திய அரசின் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் வழங்கப்படும் 'கிளவுட்' சேவையே டிஜி லாக்கர். இதில், இந்தியர்கள் அனைவரும் தங்களின் ஆதார் எண்ணை பதிவிட்டு, இணைய முடியும். இந்த கிளவுடில், தங்களின் பான் கார்டு, கல்வி சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை சேமிக்கலாம்.
அந்த வகையில், நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களின் கல்வி சார்ந்த சான்றிதழ்களை, ஒரே தளத்தில் சேமிக்கவும், செயல்படுத்தவும் எளிதாக, டிஜி லாக்கர் பயன்பாட்டை சி.பி.எஸ்.இ., கட்டாயமாக்கி உள்ளது. இதை பயன்படுத்த, மாணவர்களுக்கு ஆறு இலக்க பயனாளி அடையாள எண் வழங்கப்படும்.