'டிஎன் ஸ்பார்க்' பாட புத்தகங்கள் விடுமுறைக்கு பின் விநியோகம்
'டிஎன் ஸ்பார்க்' பாட புத்தகங்கள் விடுமுறைக்கு பின் விநியோகம்
UPDATED : டிச 19, 2025 07:06 AM
ADDED : டிச 19, 2025 07:08 AM

கோவை:
மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்ட 'டிஎன் ஸ்பார்க்' திட்டம் விரிவுபடுத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்களுக்கு அச்சு புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை கற்பிக்க மாநில பள்ளிக்கல்வி 'டிஎன் ஸ்பார்க்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் முதற்கட்டமாக கணினி ஆய்வக வசதி கொண்ட மற்றும் அதிக மாணவர்கள் பயிலும் 85 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது.
6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பிரத்யேக பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு, பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன. தற்போது இத்திட்டம் மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கோவை நகர ஒன்றியம் 20, சர்க்கார் சாமக்குளம் 18, பேரூர் 17, பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி (வடக்கு மற்றும் தெற்கு) தலா 10 பள்ளிகள் என 138 பள்ளிகளில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 232 அரசு நடுநிலைப்பள்ளிகளில், தற்போது 223 பள்ளிகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இப்பள்ளிகளில் இதுவரை ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர் புத்தகங்கள் 'சாப்ட் காப்பி' வடிவில் வழங்கப்பட்டது. இந்நிலையில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த அச்சு புத்தகங்களை வழங்கப்படவுள்ளன.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், விரிவுபடுத்தப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் ஏற்கனவே தடையற்ற அதிவேக இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது மாணவர்களுக்கான அச்சுபுத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன், மாணவர்களுக்குபுத்தகங்கள் விநியோகம் செய்யப்படும், என்றனர்.

