மூன்றாண்டுகளில் 4 சி.இ.ஓ.,க்கள்; கலகலக்கிறது கரூர் கல்வித்துறை
மூன்றாண்டுகளில் 4 சி.இ.ஓ.,க்கள்; கலகலக்கிறது கரூர் கல்வித்துறை
UPDATED : மே 16, 2025 12:00 AM
ADDED : மே 16, 2025 11:14 AM

கரூர்:
கரூர் மாவட்டத்தில், மூன்று ஆண்டுகளில், நான்கு முதன்மை கல்வி அலுவலர்கள் பணிபுரிந்திருப்பதால், பிளஸ் 2 பொதுத்தேர்வில், தேர்ச்சி விகிதம் தொடர்ந்து தடுமாறி வருகிறது.
கரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில், 103 பள்ளிகளைச் சேர்ந்த, 10,053 மாணவ - மாணவியர் தேர்வெழுதினர். அதில், 9,416 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 93.66 சதவீதம். முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், தேர்ச்சி விகிதம் பெரிதும் சரிந்துள்ளது. இதற்கு அடிக்கடி முதன்மை கல்வி அலுவலர்கள் மாற்றம் காரணமாக, பொதுத்தேர்வுகளில் நிலையற்ற தன்மை உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக, 2022ல் கீதா, 2023ல் சுமதி, 2024ல் முருகம்மாள், சுகானந்தம் ஆகியோர் பணியாற்றி உள்ளனர். கடந்த மார்ச்சில் சுகானந்தம் ஓய்வு பெற்றார். இவருக்கு பின், கரூர் மாவட்ட கல்வி அலுவலர் செல்வமணிக்கு, தற்போது முதன்மை கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெறும் நிலையில் இருப்பவர்களுக்கு, பதிவு உயர்வு அடிப்படையில் முதன்மை கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். ஒரு கல்வியாண்டு கூட, பொறுப்பில் இருக்க முடியாத சூழ்நிலையில், அவர்களால் என்ன மாற்றத்தைக் கொண்டுவர முடியும்?
கற்பித்தல் பணியை கண்காணிப்பது, ஆசிரியர்கள் பிரச்னையை தீர்ப்பது போன்றவையும் பாதிக்கப்படுகிறது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதற்காக தொடர் பயிற்சி வகுப்பு, மாத தேர்வு, முன்னோட்ட தேர்வு முறையாக நடத்தப்படுவதில்லை.
பள்ளியில் எழுத்தர் செய்ய வேண்டிய வேலைகளை, ஆசிரியர்கள் மேற்கொண்டு வருவதால், வகுப்புகளை முறையாக கவனிக்க முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.