பட்டியலின மாணவனை வெட்டிய 4 பேர் கைது: மக்கள் மலையேறி போராட்டம்
பட்டியலின மாணவனை வெட்டிய 4 பேர் கைது: மக்கள் மலையேறி போராட்டம்
UPDATED : நவ 06, 2024 12:00 AM
ADDED : நவ 06, 2024 09:12 AM
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாட்டத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி சின்னத்துரை. அவரது மனைவி சுகந்தி. ஹோட்டல் பணியாளர்.
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர். நேற்று முன்தினம் இருவரும் பணிக்கு சென்று விட்டனர். இவர்களது 2வது மகன் மனோஜ்குமார், 17, பாலிடெக்னிக் இரண்டாமாண்டு மாணவர்.
வீடு முன் நடந்து சென்ற போது, அவ்வழியாக திருமலைக்கொழுந்துபுரத்திற்கு காரில் சிலர் வேகமாக சென்றனர். மோதுவது போல சென்றதால் மாணவன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், அவரை சூழ்ந்து தாக்கினர். அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.
மாலையில் மீண்டும் திரும்பி வந்த அவர்கள், வீட்டில் தனியாக இருந்த மனோஜ்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். தலையில் பீர் பாட்டிலால் தாக்கினர். வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்தினர். காயமடைந்த மனோஜ்குமார் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி, மேலப்பாட்டத்தை சேர்ந்தவர்கள் நேற்று காலை தனியார் பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை எஸ்.பி., சிலம்பரசன், டி.எஸ்.பி., ரகுபதிராஜா உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசினர்.
யாரையும் கைது செய்யாததால் அங்குள்ள மலையில் சென்று குடியிருக்க போவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். பின், அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.
இதற்கிடையில், இதில் தொடர்புடையதாக கருதப்படும் திருமலைகொழுந்துபுரத்தை சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 17 முதல் 22 வயதிற்குட்பட்டவர்கள். அங்கு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.