UPDATED : டிச 17, 2025 09:46 PM
ADDED : டிச 17, 2025 09:47 PM
பாகல்கோட்:
மொபைல் போன் பயன்படுத்த வேண்டாம் என, பள்ளி விடுதி வார்டன் கண்டித்ததால், நான்கு மாணவியர் விடுதியில் இருந்து வெளியேறினர்.
பாகல்கோட் நகரின் நவநகரில் மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளி உள்ளது. விடுதியில் மொபைல் போன் பயன்படுத்த, தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எஸ்.எஸ்.எல்.சி., மாணவியர் நால்வர், வார்டனுக்கு தெரியாமல் ரகசியமாக மொபைல் போன் பயன்படுத்தி உள்ளனர்.
இதை கவனித்த வார்டன், 'விடுதியில் யாரும் மொபைல் போன் பயன்படுத்த கூடாது. இனி நீங்கள் மொபைல் போன் பயன்படுத்தினால், உங்கள் பெற்றோருக்கு தகவல் கூறுவேன்' என எச்சரித்தார். இதனால் மனம் வருந்திய மாணவியர், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், விடுதியில் இருந்து ஓடிவிட்டனர்.
பாகல்கோட் மகளிர் போலீஸ் நிலையத்தில், விடுதி வார்டன் புகார் செய்தார். போலீசாரும், உடனடியாக மாணவியரை தேட துவங்கினர்.
விஜயபுரா பஸ் நிலையம் அருகில், நள்ளிரவு 12:30 மணிக்கு, மாணவியரை கண்டுபிடித்தனர். விடுதிக்கு அழைத்து வந்து ஒப்படைத்தனர். 'மொபைல் போனை விட, படிப்பு முக்கியம்' என, அறிவுறுத்தினர்.

