UPDATED : டிச 17, 2025 09:47 PM
ADDED : டிச 17, 2025 09:47 PM
பொள்ளாச்சி:
பள்ளிகளில், ஒரு நோடல் அலுவலரை நியமித்து, பள்ளி வளாகத்தை பராமரிப்பதுடன், தெருநாய்கள் வளாகத்திற்குள் வருவதை கண்டறிந்து தடுக்க, தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (நாட்டுநலப்பணி), தெருநாய் அச்சுறுத்தல் சார்ந்து பள்ளித் தலைமையாசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளார். அவ்வகையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், அதற்கான நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தெருநாய் அச்சுறுத்தலில் இருந்து, மாணவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதன்படி, வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு முறையான தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை, பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பள்ளியின் அறிவிப்பு பலகையில் தெருநாய் அச்சுறுத்தல் சார்ந்த விழிப்புணர்வு பதாகைகள் ஒட்ட வேண்டும். மேலும், காலை வணக்க கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதேபோல, தெருநாய்க் கடிக்கு ஏதேனும் ஒரு மாணவர் உட்பட்டிருந்தால் எவ்வித தயக்கமும் இன்றி, ஆசிரியர் மற்றும் பெற்றோரிடம் தெரிவிக்க உரிய அறிவுரை வழங்க வேண்டும். பள்ளியை சுற்றியுள்ள இடங்களில் தெருநாய்கள் இருப்பதை கண்டறிந்தால் உடனடியாக அந்தந்த உள்ளாட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மாணவர்கள் தெருவில் உள்ள நாய்களுடன் விளையாடவும், உணவு அளிப்பதை தவிர்க்கவும் தேவையான அறிவுரை அளிக்க வேண்டும். 'ரேபிஸ்' நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், ஒரு நோடல் அலுவலரை நியமிக்க வேண்டும்.
அவர் வாயிலாக, வளாகத்தை பராமரிப்பதுடன், தெருநாய்கள் வளாகத்திற்குள் நுழையவோ அல்லது வசிக்கவோ இயலாதவாறு மேற்பார்வை செய்ய வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

