42 மாசம் ஆச்சு... நீட் தேர்வு ரகசியத்தை சொல்லுங்க! உதயநிதியை விளாசிய இ.பி.எஸ்.,
42 மாசம் ஆச்சு... நீட் தேர்வு ரகசியத்தை சொல்லுங்க! உதயநிதியை விளாசிய இ.பி.எஸ்.,
UPDATED : நவ 18, 2024 12:00 AM
ADDED : நவ 18, 2024 10:17 PM

சேலம்:
''தி.மு.க., ஆட்சி அமைத்து 42 மாதங்கள் ஆகிவிட்டது, நீட் தேர்வு ரத்து ரகசியத்தை சொல்லி விடுங்கள்,'' என்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., பேசினார்.
சேலம் மாவட்டம் மேச்சேரியில் விவசாய சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது;
தமிழகத்தில் இன்று ஊழல் நடக்காத துறையே இல்லை. ஊழல் மலிந்த அரசாங்கமாக இன்றைக்கு தி.மு.க., அரசாங்கம் திகழ்ந்து கொண்டு இருக்கிறது. அ.தி.மு.க., ஆட்சி வரும்போது ஸ்டாலின் இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.
பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி வைப்பதாக உதயநிதி கூறி வருகிறார். நாங்கள் கூட்டணி வைக்கவில்லை, நீங்கள் தான் கூட்டணி வைக்க முயற்சித்து வருகிறீர்கள். எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது பிரதமர் மோடியின் தமிழக பயணத்தின் போது கருப்பு பலூன்களை பறக்கவிட்டார்.
ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து தான் முதல் கையெழுத்து என்று சொன்னீர்கள்? ஆனால் 42 மாதங்கள் கடந்துவிட்டது. நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் எங்களிடம் உள்ளது என்று உதயநிதி தொடர்ந்து கூறி வருகிறார். சீக்கிரம் அந்த ரகசியத்தை சொல்லி விடுங்கள். மக்களிடம் பொய் பேசி ஆட்சிக்கு வந்துள்ளீர்கள். நீங்கள் தான் பொய்யர், நாங்கள் அல்ல.
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் உதயநிதி. அப்பா, மகன் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி புகழ்ந்து பேசுகின்றனர். இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.