UPDATED : நவ 18, 2024 12:00 AM
ADDED : நவ 18, 2024 10:18 PM
வாஷிங்டன்:
“அமெரிக்க மத்திய அரசு பணிகளில் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது,” என, செயல்திறன் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். வரும் ஜன., 20ல் அவர் பதவியேற்க உள்ளார். சமீபத்தில், தன் நிர்வாகத்தில் இடம்பெறுபவர்கள் குறித்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார்.
இதன்படி, டி.ஓ.ஜி.இ., எனப்படும் அரசு செயல்திறன் துறையை உருவாக்கிய அவர், அதன் தலைவர்களாக தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி ஆகியோரை நியமித்தார்.
இந்த துறை வெளியில் இருந்து, அரசுக்கு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும் என டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் அரசு துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.
புளோரிடாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
எலான் மஸ்க்கை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா என எனக்கு தெரியாது. நிச்சயம் அவர் உளியை கொண்டு வர மாட்டார். மாறாக ரம்பத்தை எடுத்து வருவார். நாங்கள் இருவரும் இணைந்து, அதை அதிகாரத்துவத்துக்கு எதிராக பயன்படுத்தப் போகிறோம்.
குறிப்பாக, மத்திய அரசு பணிகளில் உள்ள அதிகாரிகள், ஊழியர்கள் கொத்து கொத்தாக அகற்றப்படும் நடவடிக்கையை இருவரும் முன்னெடுக்கப் போகிறோம்.கடந்த வாரம் நடந்த அரசியல் மாற்றத்தின் அடிப்படையில், நாட்டை முன்னேற்றப் பாதையில் நாங்கள் அழைத்துச் செல்ல போகிறோம். இது புதிய விடியலின் துவக்கம்.
நம் நாட்டு குழந்தைகள் உட்பட பொதுமக்களுக்கான புதிய துவக்கம் காத்திருக்கிறது. மக்களின் நிறத்தை பார்த்து இல்லாமல், அவர்களின் திறனை பார்த்து அரசு வேலைகள் வழங்கப்படும்.
எங்கள் இலக்கு, அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து, வெளிப்படை தன்மையுடன் நடப்பதே ஆகும்.