உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவ மாணவியர் 4,232 பேர்
உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவ மாணவியர் 4,232 பேர்
UPDATED : ஜூலை 10, 2026 12:59 PM
ADDED : ஜூலை 10, 2026 01:04 PM

கோவை:
பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, உயர்கல்வியில் சேராத மாணவர்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், துணைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மாவட்ட அளவில் சிறப்பு நோடல் அதிகாரிகளை நியமித்து, மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உறுதி செய்ய, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி நம் மாவட்டத்திலும் நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான ஆய்வுக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. மாநகராட்சி கமிஷனர், உதவி கலெக்டர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத 4,232 மாணவர்களை தொடர்ந்து தொடர்பு கொண்டு உயர்கல்வியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும், சிறப்புத் துணைத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை கல்லூரிகளில் சேர்க்க உரிய வழிகாட்டுதல் வழங்கவும், அதிகாரிகளுக்கு கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டார்.
தேர்வில் பங்கேற்காத அல்லது தேர்ச்சி பெறாத மாணவர்களை, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் உள்ளிட்ட திறன் பயிற்சி நிறுவனங்களில் சேர்ப்பதற்கும், நடவடிக்கை எடுக்க அவர் வலியுறுத்தினார்.
உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்கள் விவரம்
2025 - 26 கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,408 மாணவர்களில் 10,176 பேர் உயர்கல்விக்கு விண்ணப்பித்துள்ளனர்; 8,751 பேர் ஏற்கனவே கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்; 1,657 மாணவர்கள் கலந்தாய்வுக்காக காத்திருக்கின்றனர். பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களில் 235 பேர் ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
