5, 8, 9, பி.யு.சி., முதல் ஆண்டு பொதுத்தேர்வு திடீர் ஒத்திவைப்பு
5, 8, 9, பி.யு.சி., முதல் ஆண்டு பொதுத்தேர்வு திடீர் ஒத்திவைப்பு
UPDATED : மார் 13, 2024 12:00 AM
ADDED : மார் 13, 2024 09:34 AM
பெங்களூரு:
நடப்பாண்டு முதல் அமலுக்கு வர வேண்டிய, 5, 8, 9, பி.யு.சி., முதல் ஆண்டு ஆகிய வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்தது.கர்நாடகாவில், நடப்பு கல்வி ஆண்டு முதல், 5, 8, 9, பி.யு.சி., முதல் ஆண்டு ஆகிய வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கடந்தாண்டு பள்ளி கல்வி துறை உத்தரவிட்டது. அரசின் உத்தரவை ரத்து செய்யும்படி தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இம்மனு மீது இம்மாதம் 6ம் தேதி விசாரணை நடத்திய தனி நபர் நீதிபதி ரவி ஆர்.ஹொசமனி, பொதுத்தேர்வு நடத்துவதற்கு தடை விதித்துத் தீர்ப்பளித்தார்.இந்த தீர்ப்பை எதிர்த்து, அரசு தரப்பில், மறுபரிசீலனை செய்யும்படி, உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நபர் நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதித்தது.இதையடுத்து, 5, 8, 9ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு துவங்கியது. 11ல் ஆங்கிலம், நேற்று கன்னட மொழி பாடத்துக்கான பொதுத்தேர்வுகள் நடந்தன. வரும் 18ம் தேதி வரை நடக்கவிருந்தது.ஆனால், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.இவ்வழக்கை, நீதிபதிகள் பெலா எம்.திரிவேதி, பங்கஜ் மித்தால் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டது.உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால், தற்போது நடந்து வரும் பொதுத்தேர்வை, தேதி குறிப்பிடாமல் கல்வி துறை ஒத்திவைத்துள்ளது. இதுதொடர்பாக, கர்நாடக பள்ளி தேர்வு, மதிப்பெண் ஆணையத்தின் தலைவர் காவேரி உத்தரவிட்டுள்ளார். இதனால், மாணவர்கள், பெற்றோர் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.