ரூ 300 கோடி மதிப்பீட்டில் பொறியியல் பயன்பாட்டு மையம் கோவையில் 5 ஏக்கர் இடம் தேர்வு
ரூ 300 கோடி மதிப்பீட்டில் பொறியியல் பயன்பாட்டு மையம் கோவையில் 5 ஏக்கர் இடம் தேர்வு
UPDATED : ஆக 02, 2024 12:00 AM
ADDED : ஆக 02, 2024 09:14 AM
கோவை:
கோவை அண்ணா பல்கலை மண்டல மையத்தில் விரைவில், பொது பொறியியல் பயன்பாட்டு மையம் அமையவுள்ளது. இதற்காக, 5 ஏக்கர் இடம் பல்கலை வளாகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டீன் சரவணக்குமார் தெரிவித்தார்.
தொழில்நிறுவனமான கோவையில், பல்வேறு சிறு குறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் செயல்படுகின்றன, பல்வேறு ஸ்டாட் அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. மேலும் கல்லுாரி நகரமாக இருப்பதால், பல்வேறு ஆராய்ச்சிகளும் நடந்துவருகின்றன. அதன் படி, ஆராய்ச்சி, கல்வி, தொழில், உற்பத்தி அனைத்திற்கும் பயன்படும் வகையில், இப்பொது பொறியியல் பயன்பாடு மையம் அமையவுள்ளது.
இதற்காக, கோவை அண்ணா பல்கலை வளாகத்தில் வட கிழக்கு பகுதியில், 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. டாடா டெக்னாஜிஸ் நிறுவனம், டிட்கோ மற்றும் அண்ணா பல்கலை மண்டல வளாகம் இணைந்து இம்மையம் அமைய செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து, அண்ணா பல்கலை மண்டல வளாக டீன் சரவணக்குமார் கூறியதாவது:
கோவை ஐ-கான் என்ற அளவில், இந்த பொது பொறியியல் பயன்பாட்டு மையம் அமையும். மாவட்ட நிர்வாகம், டிட்கோ மற்றும் டாடா நிறுவன தரப்பில் இடம் ஆய்வு செய்யப்பட்டு , 5 ஏக்கர் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக., மாதம் கட்டுமான பணிகள் துவங்கவுள்ளன. இதற்கான மொத்த மதிப்பீடு, 300 கோடி ரூபாய். 200 கோடி ரூபாய் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் தருகிறது. கட்டுமான செலவினங்களை டிட்கோ பொறுப்பு ஏற்று செய்கிறது. இடத்தை அண்ணா பல்கலை மண்டல வளாகம் வழங்கியுள்ளது.
இதில், ஏ.ஆர்., வி.ஆர்., 3டி பிரிண்டிங், மெட்ரியல் பிரிண்டிங், மிஷின் லேர்னிங், என 11 நவீன ஆய்வகங்கள் அமையவுள்ளன. இங்கு, தொழில்நிறுவனங்கள், சிறு குறு தொழில்முனைவோர், கல்விநிறுவனங்கள், ஆராய்ச்சி மாணவர்கள், பல்வேறு விதங்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஸ்டாட் அப் நிறுவனம் ஆரம்பிப்போம், 5 கோடி கொடுத்து ஒரு உபகரணங்களை வாங்க இயலாது. இங்கு உள்ள உபகரணங்களை பயன்படுத்திக்கொண்டு முன்னேறலாம். இங்கு, தங்கி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் வசதிகள் இருக்கும். ஆறு மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.