பழக்கத்துக்கு அடிமைப்படுத்தும் 5 மருந்துகள்; மத்திய அரசு தடுக்க வலியுறுத்தல்
பழக்கத்துக்கு அடிமைப்படுத்தும் 5 மருந்துகள்; மத்திய அரசு தடுக்க வலியுறுத்தல்
UPDATED : மே 21, 2025 12:00 AM
ADDED : மே 21, 2025 04:44 PM
சென்னை:
பழக்கத்துக்கு அடிமைப்படுத்தும் ஐந்து மருந்துகளின் இணையவழி விற்பனையை ஒழுங்குபடுத்தாததால், அதன் பயன்பாட்டை தடுப்பது சவாலாக இருப்பதாக, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து, மாநில மருந்து உரிமம் வழங்குதல் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதர் கூறியதாவது:
மாணவர்களிடையேயும், மக்களிடையேயும் அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மாத்திரைகள் புழக்கத்தை தடுக்க, தமிழக அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒருவர் தொடர்ந்து பயன்படுத்தினால், அதற்கு அடிமையாக கூடிய திறன் கொண்ட, 'டேபென்டடால், ட்ரெமடால், பென்டாசோசைன், நைட்ராசேபாம், கோடெய்ன்' போன்ற வலி நிவாரண மருந்துகள் இணையவழியில் எளிதில் கிடைக்கின்றன.
குஜராத், பீஹார், மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு இணையவழியாக வினியோகிக்கப்படுகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமும், மத்திய அரசிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இணையவழியாக மற்ற பொருட்களை விற்பனை செய்வதை போல், மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது என்பது விதி. அதை ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரம், மாநிலத்திற்கு இல்லை என்பதால், மத்திய சுகாதார அமைச்சகம், மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திடம் வலியுறுத்தி வருகிறோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
'அட்டவணை ஹெச் மற்றும் ஹெச் 1ல்' வகைப்படுத்தப்பட்டுள்ள இம்மருந்துகளை, டாக்டரின் பரிந்துரையின்றி, பதிவு செய்யப்பட்ட மருந்தாளுனரின் கண்காணிப்பு இல்லாமல், விற்பனை செய்வது விதிகளுக்கு புறம்பானாது.
சமூக நலன், பொது மக்கள் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும், இதுபோன்ற சட்ட விரோத விற்பனையை ஒழுங்குப்படுத்த, மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் முன்வர வேண்டும்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதை, மத்திய அரசு தொடர்ந்து தாமதப்படுத்தினால், மாநில அளவில் கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கான சூழல் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.