மதுரை அரசு மருத்துவக்கல்லுாரிக்கு வந்தன வெள்ளை பன்றிகள்
மதுரை அரசு மருத்துவக்கல்லுாரிக்கு வந்தன வெள்ளை பன்றிகள்
UPDATED : மே 21, 2025 12:00 AM
ADDED : மே 21, 2025 04:44 PM
மதுரை:
அனைத்து மருத்துவக் கல்லுாரி ஆய்வகங்களில் முயல், எலி, கின்னிப்பன்றிகளை வைத்து பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் வெள்ளைப்பன்றிகளை வைத்து ஆராய்ச்சி செய்யப்படுகிறது.
பன்றியின் இதயம், கல்லீரல், குடல், பித்தப்பை, கிட்னி, தைராய்டு எல்லாமே மனித உடலுறுப்புகளுடன் ஒத்துப்போகும். இவற்றை ஆராய்ச்சி செய்து பார்ப்பதற்கு மத்திய அரசின் கால்நடை அமைச்சக கமிட்டி மூலம் ஒப்புதல் பெற வேண்டும்.
இரண்டாண்டுகளுக்கு முன் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி ஆய்வகத்தில் வெள்ளைப்பன்றி ஆராய்ச்சி செய்வதற்காக அனுமதி கோரப்பட்டது. ஒப்புதல் கிடைத்த நிலையில் 8 மாதங்களுக்கு முன் ஆய்வகம் திறக்கப்பட்டது. அனைத்து வசதிகளும் செய்யப்பட்ட நிலையில் முதன்முறையாக மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி, வேலம்மாள் மருத்துவக் கல்லுாரிகளின் முதுநிலை அறுவை சிகிச்சை துறையைச் சேர்ந்த 8 மாணவர்கள் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த பாடத்திட்டத்தை டீன் அருள் சுந்தரேஷ்குமார் துவக்கி வைத்தார். டீன், பொது அறுவை சிகிச்சை துறைத்தலைவர் சரவணன் கூறியதாவது: இந்த பாடத்திட்டம் இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க மதுரை நகர் கிளையுடன் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது.
லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை முறையை வெள்ளைப்பன்றிகளிடம் செய்து பழகினால் முதுநிலை அறுவை சிகிச்சை பிரிவு மருத்துவ மாணவர்கள் எளிதாக கற்றுக் கொள்ள முடியும். இந்த ஆராய்ச்சிக்காக கோவை வேளாண் பல்கலையில் இருந்து ஆரோக்கியமான தலா 30 கிலோ எடையுள்ள வெள்ளைப்பன்றிகள் வாங்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கு ஸ்வைன் ப்ளூ தடுப்பூசி அளிக்கப்பட்டு நோய் தாக்குதல் இல்லை என்று கால்நடை டாக்டர்கள் சான்றிதழ் வழங்கிய பன்றிகளை கல்லுாரி ஆய்வகத்திற்கு கொண்டு வந்தோம். இங்கும் ஒருவாரம் வரை தனிமைப்படுத்தி கால்நடை டாக்டர்கள் மூலம் நோய் தாக்குதல் இல்லை என்று உறுதி செய்த பின் அறுவை சிகிச்சை ஆய்வுக்காக மாணவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
முதல்கட்டமாக பன்றியில் குடல்வால் அறுவை சிகிச்சை செய்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. அடுத்ததாக பன்றியின் குடல், கல்லீரல், ரத்தத்தமனி, இதயம், சிறுநீரகம், தைராய்டு என சிக்கலான அறுவை சிகிச்சை செய்து பழகுவதற்கு ஜூனில் மீண்டும் விண்ணப்பிக்க உள்ளோம் என்றனர்.
துணைமுதல்வர் மல்லிகா, வேலம்மாள் மருத்துவமனை டீன் ரத்தினவேல், டாக்டர்கள் செந்தில், மருது பாண்டியன், ஹேமாவதி, தாமோதரன், முத்துக்குமார் கலந்து கொண்டனர்.