UPDATED : பிப் 14, 2026 10:59 AM
ADDED : பிப் 14, 2026 11:00 AM
சென்னை:
அரசின் இணையவழி சேவையில், கூடுதலாக, 50 சேவைகள் இணைக்கப்பட உள்ளன.
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும், அரசு துறைகளுக்கும் இடையே, 'எளிமை ஆளுமை' என்ற வகையில், அரசின் இணையவழி டிஜிட்டல் தளங்களில், நிர்வாக சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் தேவையற்ற வழிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. அதாவது, 10 முக்கிய சேவைகள் சீரமைக்கப்பட்டன.
இதன் வாயிலாக, சுற்றுச் சூழல் அனுமதி பெற, தேவையில்லாத, 'வெள்ளை வகை' தொழில்களின் எண்ணிக்கை, 37ல் இருந்து, 609 ஆக உயர்ந்தது.
எளிமைப்படுத்தப்பட்ட 'ஆன்லைன்' நடைமுறைகள் வாயிலாக, 2 லட்சத்துக்கும் அதிகமான நன்னடத்தை சான்றிதழ்கள், 25,000க்கும் மேற்பட்ட சுகாதார சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொது கட்டடங்களுக்கான உரிமம் வழங்க, அங்கீகரிக்கப்பட்ட பொறியாளரின் கட்ட உறுதி சான்றிதழை பதிவேற்றம் செய்தாலே, தானியங்கி முறையில் ஒப்புதல் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டம், மகளிர் முன்னேற்றம் மற்றும் சமூக நீதி, குழந்தைகள் இல்லங்கள் பதிவு செய்தல் என, 50க்கும் அதிகமான கூடுதல் சேவைகள் இணைக்கப்பட உள்ளன.
மேலும், எளிமையாக்க வேண்டிய, அரசின் சேவைகள் தொடர்பாக, பொதுமக்கள் simplify@simplegovtn.in என்ற மின்னஞ்சலில், தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
