இடைநின்ற 54 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
இடைநின்ற 54 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
UPDATED : ஆக 27, 2025 12:00 AM
ADDED : ஆக 27, 2025 10:01 AM

மேட்டுப்பாளையம்:
தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் காரமடை பகுதியில் நீண்ட நாட்களாக, பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்த விவரங்களை, அந்தந்த பகுதி அதிகாரிகளிடம் பெற்றனர். அதன்படி பள்ளிக்கு வராத 54 மாணவர்களை தொடர்பு கொண்டு அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தனர்.
இதுகுறித்து காரமடை வட்டார வள மைய ஆசிரியர் சுரேஷ் கூறியதாவது:
காரமடையில் பள்ளிக்கு செல்லாத மாணவர்களில் பெரும்பாலும் அசாம், பீகார், ஜார்கண்ட் மாநில குழந்தைகள் அதிகம். பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு வருவது இல்லை என்ற விவரம் பெற்றோர்களுக்கே தெரிய வில்லை. பெற்றோர் காலை நேரத்தில் வேலைக்கு செல்லும் போது, பள்ளிக்கு செல்வது போல் ஏமாற்றியுள்ளனர். மேலும், சிலர் குடும்ப சூழ்நிலை, தேர்வு பயம் உள்ளிட்டவற்றால் பள்ளிக்கு வரவில்லை எனவும் கண்டறிந்தோம். அவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் அறிவுரை வழங்கியுள்ளோம். மாணவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரு கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
காரமடை கல்வி வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அசாம், ஹரியானா உள்ளிட்ட வெளிமாநில குழந்தைகள் 43 பேர் கல்வி கற்று வருகின்றனர். இவர்களுக்கு ஆதார் போன்ற ஆவணங்களையும் பள்ளிக்கல்வி அதிகாரிகளே பெற்று தந்தனர்.