போதையை ஒழிக்க செயலி புகார் செய்ய அறிவுரை... புதிய முயற்சி
போதையை ஒழிக்க செயலி புகார் செய்ய அறிவுரை... புதிய முயற்சி
UPDATED : ஆக 27, 2025 12:00 AM
ADDED : ஆக 27, 2025 10:02 AM

பெ.நா.பாளையம்:
பள்ளி வளாகம் அருகே தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனையை தடுக்க, 'போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' (டிரக் ப்ரீ தமிழ்நாடு) என்ற பெயரில் உள்ள புதிய செயலியில் புகார் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளி மேலாண்மை குழு, அரசு பள்ளிகளில் இம்மாதம், 29ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை, 3:00 மணியிலிருந்து, 4:30 மணி வரை மேலாண்மை குழு கூட்டத்தை நடத்த உத்தரவிட்டுள்ளது.
கூட்டத்தில், போதை பொருள் இல்லாத தமிழ்நாடு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் எதிர்கால சமூகம் போதை பொருள் பயன்பாடு இல்லாத சமூகமாக உருவாக வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்களிடம் மற்றும் சமூகத்தில் தொடர்ச்சியான விழிப்புணர்வு உருவாக்குவது குறித்து பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் விவாதித்து, விழிப்புணர்வு செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
போதை பொருள் இல்லாத பள்ளி சூழலை உறுதி செய்வது குறித்து பள்ளி மேலாண்மை குழுவில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.பள்ளியில் இருந்து, 100 மீட்டர் தூரத்தில் புகையிலை மற்றும் போதை பொருட்கள் தடை செய்யப்பட்ட பகுதி என உறுதி செய்ய வேண்டும். போதை பொருள் விற்போர் சார்ந்த தகவல்களை 'டிரக் ப்ரீ தமிழ்நாடு' செயலியில் பதிவு செய்தல் வேண்டும் உள்ளிட்ட, 11க்கும் மேற்பட்ட பொருள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதில், டிரக் ப்ரீ தமிழ்நாடு என்ற புதிய செயலியில் பொதுமக்கள் புகார் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் போதை பொருள் விற்பனை செய்யும் நகரம், போதை பொருளின் வகை, அவை சேமித்து வைக்கப்பட்டு இருக்கின்ற இடம், அது தொடர்பான முகவரி ஆகியவற்றை பதிவு செய்து, அதில் அப்லோட் செய்ய வேண்டும்.
அந்த செயலியில் புகார் நிலை குறித்து அறிந்து கொள்ள புகார் எண் வழங்கப்படுகிறது. அதன் வாயிலாக புகார் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம். இதில், தகவல் அளிப்பவர்கள் ரகசியம் பாதுகாக்கப்படுகிறது.