UPDATED : ஆக 06, 2024 12:00 AM
ADDED : ஆக 06, 2024 09:45 AM

புதுச்சேரி:
எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம் குவிந்து வருகின்றது.
புதுச்சேரி அரசு மற்றும் தனியார் கல்லுாரியில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீட்டுகளை சென்டாக் நிரப்ப உள்ளது. முதற்கட்டமாக, நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை இல்லாத 7080 இடங்களுக்கு முதற்கட்ட கவுன்சிலிங் நடத்தியது.
அடுத்து, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., (பல் மருத்துவம்), பி.ஏ.எம்.எஸ்., (ஆயுர் வேதம்), கால்நடை மருத்துவம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு கடந்த 28ம் தேதி முதல் www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்தில் ஆன் லைனில் விண்ணப்பம் வரவேற்றுள்ளது.
மாணவ மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்து வருவதால், சென்டாக்கிற்கு விண்ணப்பம் குவிந்து வருகின்றன. நேற்று வரை 5538 பேர் விண்ணப்பிக்க ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 3,734 பேர் மட்டுமே விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர். மற்றவர்கள் சான்றிதழ் பெறுதல் உள்பட பல்வேறு காரணங்காளல் இன்னும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்பிக்கவில்லை.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 942 பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக இடங்களுக்கு சேர்த்து 361 பேர் விண்ணப்பித்துள்ளனர். நிர்வாக இடங்களுக்கு மட்டும் 2,339 பேரும், என்.ஆர்.ஐ., சீட்டுகளுக்கு 70 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
புதுச்சேரி மாணவர்கள் 1,303, பிற மாநில மாணவர்கள் 2339, ஓ.சி.ஐ., 22, என்.ஆர்.ஐ., ஸ்பான்சர்டு 86 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
சிறப்பு இட ஒதுக்கீட்டினை பொருத்தவரை விளையாட்டு வீரர்கள் 54,முன்னாள் ராணுவ வீரர் 16, மாற்றுதிறனாளி 7, விடுதலை போராட்ட வீரர் 28, தெலுங்கு பேசும் சிறுபான்மையினர் இடங்களுக்கு 29, கிறிஸ்துவ சிறுபான்மையினர் சீட்டுகளுக்கு 32 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். அரசு ஒதுக்கீட்டு இடங்களை பொருத்தவரை விண்ணப்ப கட்டணமாக, எஸ்.சி., எஸ்.டி., மாற்றுதிறனாளி பிரிவினருக்கு, 500 ரூபாய், இதர பிரிவினருக்கு 1000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிர்வாக இடங்கள், சுய நிதி இடங்களை பொருத்தவரை எஸ்.சி.,எஸ்.டி., மாற்றுதிறனாளி பிரிவினருக்கு 1,000 ரூபாய், இதர பிரிவினர், பிற மாநில மாணவர்களுக்கு 2,000 ரூபாய், நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.ஐ., பிரிவினருக்கு 5,000 ரூபாய் விண்ணப்பம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உறுதிமொழி படிவம்
புதுச்சேரி குடியுரிமை உள்ள மாணவர்கள் 20 ரூபாய் இ.டாம்ப் பேப்பரில் உறுதிமொழி படிவத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த படிவத்தில் முதல் பார்ட்டியாக பெற்றோர் பெயரும், இரண்டாம் பார்ட்டியாக கன்வீனர், சென்டாக் இடம் பெற வேண்டும். பெற்றோரும், மாணவரும் கையொப்பமிட வேண்டும். இந்த உறுதிமொழி படிவத்தில், எக்ஸிகியூட்டி மாஜிஸ்திரேட், நோட்டரி கையெழுத்து பெற்று அப்லோடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை சம்பந்தமான சந்தேகங்களுக்கு centacugneetdhtepdy.edu.in என்ற இ-மெயில் முகவரியிலும் 0413-2655570, 2655571 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சென்டாக் அறிவித்துள்ளது.