6 மாதத்திற்குள் கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு: ஐகோர்ட் உத்தரவு
6 மாதத்திற்குள் கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு: ஐகோர்ட் உத்தரவு
UPDATED : ஆக 23, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: ‘அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நியமிப்பதற்காக ஆயிரத்து700 க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க சிறப்புத் தேர்வை ஆறு மாதங்களில் நடத்தி முடிக்க வேண்டும்’ என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரத்து 200 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் தகுதிவாய்ந்தவர்களை தேர்ந்தெடுத்து நியமிப்பதற்காக, சிறப்புத் தேர்வை நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.
இதையடுத்து, 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசு ஓர் உத்தரவை பிறப்பித்தது. அதில், ஆயிரத்து 880 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்புத் தேர்வை நடத்துவது என்றும் அதன் பின்னர் வாரியத்திடம் இருந்து பட்டியலைப் பெற்று பணியிடங்களை நிரப்புவது என்றும் கூறப்பட்டது. இந்த அரசாணையில் பி.எட்., தகுதி பற்றி குறிப்பிடவில்லை.
இந்த அரசாணையை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் கம்ப்யூட்டர் அறிவியல் பி.எட்., பட்டதாரி ஆசிரியர்கள் அமைப்பு மனுத் தாக்கல் செய்தது. ‘கம்ப்யூட்டர் அறிவியல் ஒரு பொது கல்வி என்பதால் பி.எட்., பட்டம் பெற்றவர்களை தான் கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்’ என அவர்கள் கோரினர்.
ஆனால் மேல்நிலைப் பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், ‘பொதுக் கல்வியில் கம்ப்யூட்டர் அறிவியல் ஒரு தொழில் படிப்பு என்பதால் அதற்கு பி.எட்., பட்டதாரிகள் தேவையில்லை’ என தெரிவிக்கப்பட்டது.
மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், 2006ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசும், மேல்நிலைப்பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் சங்கமும் அப்பீல் மனுக்களை தாக்கல் செய்தன.
இதை நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் அடங்கிய ‘டிவிஷன் பெஞ்ச்’ விசாரித்தது. அரசு சார்பில் அப்போதைய அட்வகேட்-ஜெனரல் கண்ணதாசன், சங்கத்தின் சார்பில் சீனியர் வக்கீல் முத்துகுமாரசாமி ஆஜராயினர்.
‘டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு:
பி.எட்., எம்.எட்., படித்தவர்கள் அரசு வேலைக்காக இன்னும் காத்திருக்கின்றனர். இப்படி ஒரு சிறப்புத் தேர்வை நடத்தி பணியிடங்களை நிரப்பினால், தங்களுக்கு போதிய இடங்கள் இருக்காது என பி.எட்., எம்.எட்., முடித்தவர்கள் கருதுகின்றனர்.
‘போட்டித் தேர்வு நடத்துவதன் மூலமே தற்போது ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; தேர்வில் கலந்துகொள்ளும் அனைவருமே வெற்றி பெறுவர் என எதிர்பார்க்க முடியாது; ஆகையால் கணிசமான பணியிடங்கள் வரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எட்., எம்.எட்., பட்டம் பெற்றவர்களும் முழு தகுதி படைத்தவர்கள், வாய்ப்புக்காக காத்திருக்கும் அவர்களை மறந்துவிடக் கூடாது.
அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிப்ரவரி 4ம் தேதியிட்ட கடிதத்தில், ‘எதிர்காலங்களில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியில் காலியிடங்கள் ஏற்படும்போது, தகுதி வாய்ந்த அனைவரும் கலந்து கொள்ளும் விதத்தில் தேர்வு இருக்கும். அரசு பள்ளிகளில் பணிபுரியும் கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு என முன்னுரிமை இருக்காது. வேலைவாய்ப்பக சீனியாரிட்டி அடிப்படையில் தேர்வு நடக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நியாயமானது.
எனவே, ஒரே முறையாக கருதி இந்த சிறப்புத் தேர்வை ஆறு மாதங்களில் நடத்தி முடிக்க வேண்டும். அதன் பிறகு விடுபட்ட காலியிடங்கள், இதர காலியிடங்களில் அரசு அளித்த உறுதிப்படி தகுதிவாய்ந்த பி.எட்., எம்.எட்., முடித்தவர்களை வேலை வாய்ப்பக சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப வேண்டும். இந்த அப்பீல் மனுக்கள் ஏற்கப்படுகிறது. ரிட் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு ‘டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.

