போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் தற்காலிக பணியில் 6,500 செவிலியர்
போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் தற்காலிக பணியில் 6,500 செவிலியர்
UPDATED : ஜூன் 27, 2026 11:35 AM
ADDED : ஜூன் 27, 2026 11:37 AM
கோவை:
மருத்துவ தேர்வு வாரியம் நடத்திய போட்டித்தேர்வில் வெற்றி பெற்ற, 6 ஆயிரத்து 500 பேர் தற்காலிகமாக பணிப்புரிவதால், நிரந்தர பணி ஆணை வழங்க புதிய அரசு ஆவண செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழகம் முழுக்க, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள ஸ்டாப் நர்ஸ் பணிக்கு, பி.எஸ்.சி., நர்சிங் முடித்தோர் நியமிக்கப்படுகின்றனர். இதற்கு மருத்துவ தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்.
கடந்த 2015 முதல் இத்தேர்வில் வெற்றி பெற்று, தற்காலிக பணியில் உள்ள, 6 ஆயிரத்து 500 பேர், 21 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்க்கின்றனர். இவர்களை சீனியாரிட்டி அடிப்படையில் அவ்வப்போது ஏற்படும் காலியிடங்களில், நிரந்தரமாக்குகின்றனர். இந்நடைமுறையால், போட்டித் தேர்வில் வெற்றி பெற்றும், பணிச்சலுகை இன்றி தவிப்பதாக பலரும் ஆதங்கப்படுகின்றனர்.
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்க பொது செயலாளர் சுபின் கூறுகையில், “தமிழகம் முழுக்க அரசு மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனைகளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்களை சேர்த்தால், 4,500க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன.
இதோடு, அதிக வெளி நோயாளிகள் கொண்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளுக்கு புதிய பணியிடங்கள் உருவாக்க வேண்டியுள்ளது. தற்போது வரை 6,500 செவிலியர்கள் தற்காலிக பணியில் உள்ளோம். விரைவில் சீனியாரிட்டி பட்டியல் வெளியிட்டு, அனைவருக்கும் பணி நிரந்தர ஆணை வழங்க வேண்டும். போட்டித்தேர்வில் வெற்றி பெற்றும், தற்காலிக பணியில் நீட்டிப்பதால் எந்த பணிசலுகையும் கிடைப்பதில்லை,” என்றார்.
