மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தில் 74.34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - மத்திய அரசு தகவல்
மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தில் 74.34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - மத்திய அரசு தகவல்
UPDATED : ஜூலை 23, 2025 12:00 AM
ADDED : ஜூலை 23, 2025 09:04 AM

சென்னை:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 2024-25ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டில் 74.34 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிட்டால், 2023-24ஆம் ஆண்டில் 79.39 லட்சம் பேரும், 2022-23ஆம் ஆண்டில் 75.79 லட்சம் பேரும் இந்தத் திட்டத்தின் பயனாளர்களாக இருந்துள்ளனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கடந்த மூன்று நிதியாண்டுகளில் முக்கிய நிதி ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளது. 2022-23ஆம் நிதியாண்டில் ரூ.9,743.53 கோடி மத்திய நிதியாக விடுவிக்கப்பட்டு, ரூ.11,420.95 கோடி (மாநில பங்குடன்) செலவிடப்பட்டது. தொடர்ந்து 2023-24ஆம் ஆண்டில் மத்திய அரசு ரூ.12,616.53 கோடியை வழங்கி, மொத்த செலவாக ரூ.13,395.54 கோடி பயன்படுத்தப்பட்டது. தற்போதைய 2024-25 நிதியாண்டில் மத்திய அரசால் ரூ.7,585.49 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, இதுவரை ரூ.10,744.75 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் ஊழியர்களின் திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, மத்திய அரசு 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் உன்னதி திட்டம் என்ற பெயரில் புதிய பயிற்சி முயற்சியை தொடங்கியது.
இந்த திட்டத்தின் மூலம், தொழிலாளர்களை பகுதி வேலைவாய்ப்பிலிருந்து முழுநேர சுயதொழில் அல்லது கூலி வேலைவாய்ப்புக்கு நகர்த்துவதற்கான திறன்கள் வழங்கப்படுகின்றன. 2 லட்சம் பேரை பயிற்சிப்படுத்தும் இலக்குடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், மார்ச் 31, 2025 வரை 90,894 பேர் பயனடைந்துள்ளனர்.
இந்த விவரங்களை, மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திரு கம்லேஷ் பாஸ்வான், மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.