/
செய்திகள்
/
கல்விமலர்
/
செய்திகள்
/
இந்தியாவின் முதல் ஏஜென்டிக் ஏஐ டிஜிட்டல் மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையம்- அஜிலிசியம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம் ஒப்பந்தம்
/
இந்தியாவின் முதல் ஏஜென்டிக் ஏஐ டிஜிட்டல் மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையம்- அஜிலிசியம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம் ஒப்பந்தம்
இந்தியாவின் முதல் ஏஜென்டிக் ஏஐ டிஜிட்டல் மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையம்- அஜிலிசியம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம் ஒப்பந்தம்
இந்தியாவின் முதல் ஏஜென்டிக் ஏஐ டிஜிட்டல் மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையம்- அஜிலிசியம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம் ஒப்பந்தம்
UPDATED : ஜூலை 23, 2025 12:00 AM
ADDED : ஜூலை 23, 2025 09:03 AM
சென்னை:
இந்தியாவில் முதன்முறையாக ஏஜென்டிக் ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் டிஜிட்டல் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை நிறுவும் பொருட்டு, முன்னணி உயிரியற் தொழில்நுட்ப நிறுவனம் அஜிலிசியம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்எஸ் (ஆர்ஐஎச்இஆர்) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மையம் செயற்கை நுண்ணறிவு, தரவுகள் மற்றும் மருத்துவ மேம்பாட்டு நோக்கங்களை ஒருங்கிணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. நோயாளிகளுக்கான தனிப்பட்ட சிகிச்சை முறைகள், முன்னறிவிப்பு நோயறிதல், டிஜிட்டல் பரிசோதனைகள் மற்றும் நுண்ணறிவு சார்ந்த முடிவெடுக்கும் வசதிகள் இம்மையத்தின் முக்கிய அம்சங்களாகும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவின் டிஜிட்டல் மருத்துவத் துறையை விரைவாக வளர்த்து, உலக அளவில் முன்னிலை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
அஜிலிசியம் தனது டேட்டா சயன்ஸ், பயோஸ்டாடிஸ்டிக்ஸ் மற்றும் ஏஐ நிபுணத்துவங்களை வழங்கவுள்ளது. அதே நேரத்தில், எஸ்ஆர்ஐஎச்இஆர் தனது பரந்த மருத்துவ தரவுகள், துறைசார் நிபுணர்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப வசதிகளை பங்களிக்கவுள்ளது.
மேலும், மருத்துவத் தரவுகளை ஒருங்கிணைக்கும் வகையில் முழு சுகாதார தரவு இயக்கம் என்ற திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் சுகாதார தரவுகள் உலகத் தரத்திற்கு இணையாக தரப்படுத்தப்படும்.
இந்த ஒப்பந்தத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாக, ஜெனரேடிவ் ஏஐ மருத்துவம் தொடர்பான சான்றிதழ் படிப்பு இந்தியாவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது. இது மருந்து கண்டுபிடிப்பு, நோயறிதல் கணிப்புகள் மற்றும் ஏஐ தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அஜிலிசியம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜ் பாபு கூறுகையில், இந்த ஒப்பந்தம், ஏஜென்டிக் ஏஐ வழியாக இந்திய மருத்துவத் துறையை மாற்றுவதற்கான முக்கிய கட்டமாகும். இந்தியா ஏஐ யை இறக்குமதி செய்யவில்லை, அதனை இங்கேயே உருவாக்குகிறது என்றார்.
எஸ்ஆர்ஐஎச்இஆர் நிறுவனத்தின் துணைவேந்தர் டாக்டர் உமாசேகர் கூறுகையில் அஜிலிசியத்துடன் இணைந்து, மருத்துவம், அறிவியல் மற்றும் கல்வியை ஒருங்கிணைக்கும் புதிய எல்லைகளை எட்டுவோம். இது சுகாதாரத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய பரிமாணமாகும் என்றார்.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கூட்டு ஆய்வுகள், கருத்தரங்குகள், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மற்றும் சமூகப் பங்களிப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.