டாக்டர் படிப்பில் புதிதாக 75,000 இடங்கள்: பிரதமர் மோடி அறிவிப்பு
டாக்டர் படிப்பில் புதிதாக 75,000 இடங்கள்: பிரதமர் மோடி அறிவிப்பு
UPDATED : நவ 14, 2024 12:00 AM
ADDED : நவ 14, 2024 12:57 PM

தர்பாங்கா:
நாடு முழுதும் மருத்துவ படிப்புக்கு, புதிதாக 75,000 இடங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
இங்குள்ள பாட்னாவில் ஏற்கனவே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட்டு வரும் நிலையில், தர்பாங்காவில் 1,260 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். அப்போது, பீஹாரில் 5,070 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளவுள்ள தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
அதுமட்டுமின்றி, 1,520 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர், 4,020 கோடி ரூபாய் மதிப்புள்ள பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைசார் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி கூறியதாவது:
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கு முதல்வர் நிதீஷ் குமாரின் பங்கு அளப்பரியது. மாநிலத்தை முந்தைய காட்டாட்சி பிடியில் இருந்து அவர் மீட்டுள்ளார்.
நாடு முழுதும் மருத்துவ படிப்புக்கு புதிதாக 75,000 இடங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தாய்மொழியில் மருத்துவக் கல்வி என்ற மிகப்பெரிய முடிவை அரசு எடுத்துள்ளது. விரைவில், ஹிந்தி உட்பட இந்திய மொழிகளில் மருத்துவப் படிப்பை கொண்டு வரவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் காலில் விழுந்த நிதீஷ்
திட்டங்களை துவக்கி வைத்து மேடையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடியை நோக்கிச்சென்ற முதல்வர் நிதீஷ் குமார், கைகூப்பி வணங்கியதுடன், திடீரென அவர் காலில் விழுந்தார். அதைத் தடுத்த பிரதமர் மோடி, கைகளை குலுக்கி தன் அருகே அமர வைத்தார். அதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணியினர் மோடிக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக பிரமாண்ட மாலை அணிவித்தபோது, அருகில் இருந்த நிதீஷ் குமாரையும் அவர் அருகே இழுத்து நிறுத்திக்கொண்டார்.