ஆண்டில் 8 மாதம் வெப்ப அலை வீசும்: அண்ணா பல்கலை ஆய்வில் அதிர்ச்சி
ஆண்டில் 8 மாதம் வெப்ப அலை வீசும்: அண்ணா பல்கலை ஆய்வில் அதிர்ச்சி
UPDATED : ஜூலை 01, 2024 12:00 AM
ADDED : ஜூலை 01, 2024 10:40 AM

சென்னை:
காலநிலை மாற்றத்தின் விளைவாக, அடுத்த 25 ஆண்டுகளில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், ஆண்டுக்கு எட்டு மாதங்கள் வரை வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அண்ணா பல்கலை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ உள்ளிட்ட விளைவுகளால், அதீத வெப்பம், அதீத மழை போன்ற பிரச்னைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். கடல் மற்றும் நிலப் பரப்பில், வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு காரணம்.
துாத்துக்குடி
இந்நிலையில், நாட்டின் 21 நகரங்களில், அடுத்த 25 ஆண்டுகளில் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, சென்னை அண்ணா பல்கலையின் பேரிடர் மேலாண்மை மற்றும் கால நிலை மாற்ற மையம் ஆய்வு நடத்தியது.
அந்த ஆய்வு குறித்து, அண்ணா பல்கலை பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:
நாடு முழுதும், 21 நகரங்களில் தற்போது பதிவாகும் சராசரி வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தமிழகத்தில் தற்போது 29.5 முதல், 33.4 டிகிரி செல்ஷியஸ் அளவிலேயே சராசரி வெப்பநிலை பதிவாகி வருகிறது.
இது, 2050ம் ஆண்டில், 0.4 செல்ஷியஸ்; 2080ல், 1.3 செல்ஷியஸ்; 2100ல், 1.7 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு அதிகரிக்கும்.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, துாத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சை ஆகிய நகரங்களில் தற்போது வெப்ப அலை வீசும் காலம், அடுத்து வரும் ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கும்.
நடவடிக்கை
இதனால், கோடைக்காலம் என்ற குறிப்பிட்ட வரையறையை கடந்து, ஆண்டில் எட்டு மாதங்கள் வரை மக்கள் வெப்ப அலையை உணரும் நிலை ஏற்படும். இதனால், மக்கள் பல்வேறு வகை அசவுகரியங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
இதேபோல, குறுகிய காலத்தில் அதிக மழை கொட்டித் தீர்க்கும் நிகழ்வுகளும் அதிகரிக்கும். இதன்படி, சராசரி மழை அளவு, 2050ல், 4 சதவீதம்; 2080ல், 11 சதவீதம்; 2100ல், 16 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கால நிலை மாற்றத்தில் வெப்பநிலை அதிகரிப்பதற்கான காரணிகளை அறிந்து, அதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.