UPDATED : ஆக 28, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகளில் 800க்கும் அதிகமான தலைமையாசிரியர் பணியிடம் காலியாகவுள்ளது. இப்பணியிடத்தை நிரப்ப கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க கோவை மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கும் போது உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருவரும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவரும் என 2:1 என்ற விகிதாச்சாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரக்கூடாது.
மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் காலியாக இருக்கும் போது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதை மாற்றி, அந்தந்த மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்களின் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலின் படி, மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கும் , மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 800க்கும் அதிகமாக உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர்களாக இருந்து முதுநிலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக வரும்போது, பதவி உயர்வுக்கு‘ 22 பி’ பிரிவின் படி, ஊதியம் நிர்ணயம் செய்ய தமிழக பள்ளிக்கல்வித்துறை உரிய ஆணையை உடனே பிறப்பிக்க வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன் தேனி மாவட்டத்தில் வினாத்தாள் கட்டுக்காப்பாளராக இருந்த இரு தலைமையாசிரியர்கள், எவ்வித குற்றச்சாட்டும் இன்றி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் ஓய்வு பெற்ற பின்பும், தற்காலிக பணி நீக்கம் ரத்து செய்யப்படவில்லை.
இந்த பணி நீக்கத்தை ரத்து செய்யாவிட்டால், 10ம் வகுப்பு வினாத்தாள் கட்டுக்காப்பாளர் பணியிடத்தை ஏற்பதை பற்றி சங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டியது இருக்கும் என மாநில பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இரவு காவலர், அலுவலக உதவியாளர், துப்புரவு தொழிலாளர் பணியிடம் காலியாகவுள்ளன. இப்பணியிடத்தை நிரப்பாததால் நிர்வாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே உடனே காலியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

