UPDATED : அக் 19, 2026 02:38 PM
ADDED : அக் 19, 2026 02:39 PM
சென்னை:
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட, ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில், பணியாளர்கள் இல்லாததால், மக்கள் நலத்திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
நிர்வாக வசதிக்காக அவ்வப்போது ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகள் உருவாக்கப்படும். அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பந்தலுார், திருவள்ளூரில் மாதர்பாக்கம், விழுப்புரத்தில் கிளியனுார், கஞ்சனுார், காஞ்சிபுரத்தில் சாலவாக்கம், திருவண்ணாமலையில் மழையூர், கிருஷ்ணகிரியில் அஞ்செட்டி, கள்ளக்குறிச்சியில் வாணாபுரம் என, ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள், கடந்த ஜூலை மாதம் உருவாக்கப்பட்டன.
புதிதாக ஒன்றியம் உருவாக்கும் போது, சிறப்பு அதிகாரிகளை நியமித்து, ஆரம்ப கட்ட பணிகள் முடித்து, ஓரிரு வாரங்களுக்குள் அரசு அலுவலர்களை நியமிப்பர். ஆனால், புதிய ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டு, மூன்று மாதம் முடிவடையும் சூழலிலும், ஒன்றியங்களுக்கான பணியாளர்கள் இன்னமும் நியமிக்கப்படவில்லை. அதேபோல, சிறப்பு அதிகாரிகளும் சுணக்கமாக இருக்கின்றனர்.
இதனால், புதிய ஒன்றியங்களில் வசிக்கும் மக்களுக்கான குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட செய்வதற்கு ஆளில்லை. அதேபோல, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட, 11 மாவட்டங்களில், 93 ஊராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. அங்கும் இதே நிலைதான் இருக்கிறது.
எனவே, புதிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான பணியாளர்களை விரைவில் நியமித்தால் தான், வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை, அரசிடம் இருந்து பெற முடியும். உள்ளாட்சி தேர்தல் பணிகளையும் செய்ய முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
