டான்செட், சீட்டா நுழைவுத்தேர்வு 90 சதவீதம் பேர் பங்கேற்பு
டான்செட், சீட்டா நுழைவுத்தேர்வு 90 சதவீதம் பேர் பங்கேற்பு
UPDATED : மார் 24, 2025 12:00 AM
ADDED : மார் 24, 2025 12:07 PM

கோவை :
கோவையில் நடந்த டான்செட், சீட்டா நுழைவுத்தேர்வுகளில், 90 சதவீதம் மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு அண்ணா பல்கலையின் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்விலும் (டான்செட்), எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க் ஆகிய முதுநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேர, பொது இன்ஜினீயரிங் நுழைவுத் தேர்விலும் (சீட்டா) தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
இத்தேர்வை, அண்ணா பல்கலை நடத்தி வருகிறது. 2025 - -26-ம் கல்வியாண்டுக்கான, டான்செட் நுழைவுத் தேர்வுகள், கடந்த இரு தினங்களாக நடந்தன.
எம்.சி.ஏ.,க்கான நுழைவுத் தேர்வு, 22ம் தேதி காலை 10:00 முதல், மதியம், 12:00 மணி வரையும், எம்.பி.ஏ., படிப்புக்கான நுழைவுத்தேர்வு, அன்றைய தினம் மதியம் 2:30 முதல் மாலை 4:30 மணி வரை நடந்தன.
அதேபோல், சீட்டா நுழைவுத் தேர்வு, நேற்று காலை 10:00 முதல், மதியம், 12:00 மணி வரை நடந்தது. கோவையில், 5,471 மாணவர்கள் தேர்வு எழுத தகுதி பெற்றனர்.
கோவை தடாகம் ரோடு, அரசு தொழில்நுட்பக் கல்லுாரி, கோவை சோமையம்பாளையம் அண்ணா பல்கலை மண்டல மையம், பீளமேடு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி, நீலாம்பூர், பி.எஸ்.ஜி., ஐ டெக், சிட்ரா, கோவை தொழில்நுட்பக் கல்லுாரி, சரவணம்பட்டி எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்தது.
மொத்த மாணவர்களில், 90 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.