சென்னை ஐ.ஐ.டி.க்கு ரூ.228 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர்
சென்னை ஐ.ஐ.டி.க்கு ரூ.228 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர்
UPDATED : ஆக 07, 2024 12:00 AM
ADDED : ஆக 07, 2024 08:37 PM

சென்னை:
சென்னை ஐ.ஐ.டி.முன்னாள் மாணவர் டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா என்பவர் தான் படித்த ஐ.ஐ.டி.,க்கு ரூ. 228 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
கடந்த 1970ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் ஜெட் புரபல்சனில் முதுகலைப் பட்டம் (ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங்) பெற்றவர். அத்துடன் 1980ம் ஆண்டில் ஹார்வர்ட் பிசினஸ் பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்றார்.
அமெரிக்காவில் ஹாப்மேன் குழும நிறுவனங்களில் குழுமத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியனார்.
இந்நிலையில் தான் பயின்ற சென்னை ஐ.ஐ.டி.,க்கு ரூ. 228 கோடி நன்கொடை வழங்கினார். அகில இந்திய கல்வி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய நன்கொடை இது என கூறப்படுகிறது.மேலும் 54 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை ஐ.ஐ.டிக்கு கிடைத்த மிகபெரிய நன்கொடை இது என கூறப்படுகிறது.
டாக்டர் கிருஷ்ணா சிவுகுலாவை கவுரவிக்கும் விதமாக நடைபெற்ற நிகழ்வில் டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா, சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, சென்னை ஐ.ஐ.டி. டீன், பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா, ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த நன்கொடையைக் கொண்டு சென்னை ஐஐடியில் படிக்கும் சர்வதேச மாணவர்களின் கல்வி உதவித்தொகை, ஆராய்ச்சிக்கான சிறப்பு மானியத் திட்டம், சென்னை ஐஐடியின் புதிய மாணவர்களுக்கான இளநிலை பட்ட கல்வி உதவித்தொகை திட்டம், விளையாட்டு வீர்ர்களுக்கான பாடத்திட்டம், சாஸ்த்ரா இதழை மேம்படுத்துதல், கிருஷ்ணா பிளாக் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என ஐ.ஐ.டி தெரிவித்துள்ளது.
டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா பேசுகையில், சென்னை ஐ.ஐ.டியில் நான் படித்த நிகழ்வை மறக்க முடியாது.மகிழ்ச்சிகரமாக இருந்ததுடன் வாழ்க்கையில் பலவற்றைச் சாதிக்கவும் எனக்கு உதவியது. அகில இந்திய அளவில் எந்தவொரு பல்கலைக்கழகத்திற்கும் வழங்கப்பட்ட தொகையைவிட நன்கொடையை வழங்கி, நான் படித்த கல்வி நிறுவனத்திற்கு ஒரு பரிசாக திருப்பிச் செலுத்தும் நிலையில் வளர்ந்துள்ளேன் என்றார்.
கிருஷ்ணசிவகுலா ஆண்டிற்கு சுமார் 1,000 கோடி ரூபாய் வருவாய் தரக்கூடிய வகையிலான இரண்டு தொழில்களை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.