மதுரை எய்ம்ஸ்க்கு மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கணும்: அமைச்சர் ஆதங்கம்
மதுரை எய்ம்ஸ்க்கு மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கணும்: அமைச்சர் ஆதங்கம்
UPDATED : ஆக 07, 2024 12:00 AM
ADDED : ஆக 07, 2024 08:36 PM
மதுரை:
மத்திய சுகாதார அமைச்சராக இருந்த மன்சுக் மாண்டவ்யாவை 11 முறை சந்தித்தோம். இப்போது புதிய மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி. நட்டாவை சந்தித்து மறுபடியும் மதுரை எய்ம்ஸ்க்கு கோரிக்கை வைக்க வேண்டும் என மதுரையில் சுகாதார அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மதுரை கள்ளந்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.60 லட்சத்தில் புற நோயாளிகள் பிரிவு கட்டடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
பிற மாநிலங்களில் கட்டப்பட்ட, கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு மத்திய அரசு தான் நிதி ஒதுக்கீடு செய்கிறது. மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு ஜப்பானின் ஜெய்க்கா கடன் திட்ட நிதி என்று மத்திய அரசு அறிவித்த போது, அப்போதைய முதல்வர் பழனிசாமி விழித்துக் கொண்டு, ஜப்பானை கை காட்டுகிறீர்களே என்று கேட்டிருக்கலாம்.
அதைச் செய்ய தவறியதால் தான் திட்டம் தள்ளிக் கொண்டே போகிறது. மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதித்தால் எய்ம்ஸ் கட்டடம் கட்டுவார்கள் என்ற நம்பிக்கையில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை நடக்கிறது. எய்ம்ஸ் கட்டுமானம் நிச்சயம் வரும். ஆனால் காலம் கடந்து வரும்.
தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து உடல் உறுப்புகளை தானம் பெறலாம் எனவும் அவருக்கு அரசு மரியாதை செய்யப்படும் என்ற விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. இந்தாண்டு ஜனவரி முதல் தற்போது வரை 150 மூளைச்சாவு நோயாளிகளின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டுள்ளது என்றார்.