இலவச பள்ளி சீருடை குறித்த காலத்தில் வழங்க நடவடிக்கை
இலவச பள்ளி சீருடை குறித்த காலத்தில் வழங்க நடவடிக்கை
UPDATED : ஆக 07, 2024 12:00 AM
ADDED : ஆக 07, 2024 08:34 PM
சென்னை:
பள்ளி மாணவர்களுக்கு குறித்த காலத்தில், நான்கு செட் சீருடைகள் வழங்கவும், இலவச வேட்டி, சேலையை, பொதுமக்களுக்கு பண்டிகை காலங்களில், குறித்த நேரத்தில் வழங்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதற்கு, அமைச்சர் காந்தி அளித்துள்ள பதில்:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ், 8ம் வகுப்பு வரையிலான, சத்துணவு திட்டத்தின் கீழ் உள்ள மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் நான்கு இணை சீருடைகள் வழங்கப்படுகின்றன. சீருடை துணிகள் கைத்தறி துறையால் உற்பத்தி செய்யப்பட்டு, சமூக நலத்துறையால் தைக்கப்பட்டு, பள்ளிக் கல்வித் துறையால் வினியோகம் செய்யப்படுகிறது.
கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் வழியே, நான்கு இணை சீருடை துணி உற்பத்தி, நிறைவடையும் தருவாயில் உள்ளது. இரண்டு இணை சீருடை துணி, 237.98 லட்சம் மீட்டர் உற்பத்தி செய்யப்பட்டு, மாவட்டங்களில் உள்ள சமூக நலத்துறை துணி வெட்டும் மையங்களுக்கு, ஜூன் 26க்குள் அனுப்பி வைக்கப்பட்டது. இத்துணிகளை வைத்து, சீருடைகள் தைக்கப்பட்டு, பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகிறது.
மூன்றாவது மற்றும் நான்காவது இணை சீருடைகளுக்கான துணி தேவைப் பட்டியல், சமூக நலத்துறை கமிஷனரிடம் இருந்து எதிர்நோக்கப்படுகிறது. ஏற்கனவே வழங்கப்பட்ட துணி தேவை பட்டியலை வைத்து, மூன்றாவது இணை சீருடை துணி உற்பத்தி முடிக்கப்பட்டுள்ளது. நான்காவது இணை சீருடை உற்பத்தி முடியும் நிலையில் உள்ளது.
நேற்றுமுன்தினம் வரை, மூன்றாவது இணை சீருடைக்கு தேவையான துணி 47; கேஸ்மென்ட் ரக சீருடை துணி 56; சர்டிங் ரக சீருடை துணி 38 சதவீதம், மாவட்டங்களில் உள்ள துணி வெட்டும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதே போலவே வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், தொடர் நடவடிக்கையால், கடந்த ஆண்டு வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு, டிச., 31க்கு முன், அனைத்து தாலுகாக்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
அதேபோல், 2025 பொங்கல் பண்டிகைக்கு முன், இலவச வேட்டி, சேலை வழங்க, டிச.,31க்குள் உற்பத்தியை முடிக்கப்பட உள்ளது. எனவே, உண்மைக்கு புறம்பான, அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை பரப்பும் நோக்கமுடன் செய்திகளை வெளியிடுவது, பொறுப்பான அரசியல் தலைவருக்கு அழகல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.