துவக்க வகுப்பு பாடப்புத்தகங்கள்; பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுரை
துவக்க வகுப்பு பாடப்புத்தகங்கள்; பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுரை
UPDATED : ஆக 07, 2024 12:00 AM
ADDED : ஆக 07, 2024 08:31 PM
திமர்பூர்:
என்.சி.இ.ஆர்.டி., எஸ்.சி.இ.ஆர்.டி., நிர்ணயித்த பாடப்புத்தகங்களைத் தவிர வேறு பாடப்புத்தகங்களைப் படிக்கும்படி, மாணவர்களை கட்டாயப்படுத்த முடியாது என, பள்ளிகளுக்கு டில்லி கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பி அறிவுறுத்தியுள்ளது.
தனியார் பள்ளிகளில் என்.சி.இ.ஆர்.டி., எஸ்.சி.இ.ஆர்.டி., நிர்ணயித்த பாடப்புத்தகங்களைத் தவிர வேறு பாடப்புத்தகங்களைப் படிக்கும்படி துவக்கக் கல்வி மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகின.
இதுதொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு மாநில கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
என்.சி.இ.ஆர்.டி., எஸ்.சி.இ.ஆர்.டி., நிர்ணயித்த பாடப்புத்தகங்களைத் தவிர வேறு பாடப்புத்தகங்களைப் படிக்கும்படி, துவக்க வகுப்பு மாணவர்களை பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது.
கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை தங்கள் இணையதளம் மற்றும் அறிவிப்புப் பலகையில் பள்ளிகள் வெளியிட வேண்டும். தனிப்பட்ட முறையிலும் பெற்றோருடன் இந்தத் தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
எந்த குழந்தையும் பாகுபாடு காட்டவோ, துன்புறுத்தப்படவோ அல்லது புறக்கணிக்கப்படவோ கூடாது. மன அல்லது உடல் ரீதியான துன்பங்களை ஏற்படுத்துவது சிறார் நீதிச் சட்டம், 2015ன்படி, விதிகளை மீறும் செயல்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற விஷயங்களில், தனியார் பள்ளிகளை அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் எஸ்.சி.இ.ஆர்.டி., பரிந்துரைக்கும் புத்தகங்களுடன் கூடுதலாக தனியார் வெளியீடு புத்தகங்களை வைத்திருக்க வேண்டும் என்று பெற்றோரை இந்த பள்ளிகள் எளிதாக நம்ப வைக்கின்றன.
பெற்றோரிடம் நம்பகத்தன்மை உருவாக்க அரசால் முடியவில்லை. தற்போதைய சுரண்டல் சூழ்நிலையை உருவாக்குவதற்கு அரசாங்கமே பொறுப்பு என அகில இந்திய பெற்றோர் சங்க தேசிய தலைவர் அசோக் அகர்வால் கூறியுள்ளார்.