குழந்தைகளை படிக்க வைத்தால் நல்ல எதிர்காலம் நிச்சயம் : பெற்றோருக்கு அறிவுரை
குழந்தைகளை படிக்க வைத்தால் நல்ல எதிர்காலம் நிச்சயம் : பெற்றோருக்கு அறிவுரை
UPDATED : மே 23, 2025 12:00 AM
ADDED : மே 23, 2025 11:11 AM
பந்தலுார்:
பழங்குடியின பெற்றோர்; குழந்தைகளை படிக்க வைத்தால் மட்டுமே, அனைத்து வகையிலும் மேம்பட முடியும் என தெரிவிக்கப்பட்டது.
பந்தலுார் அருகே கூவமூலா பழங்குடியின கிராமத்தில், நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கம், பந்தலுார் வட்டார சுகாதாரத்துறை இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.
நிர்வாகி நீலகண்டன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் விஜயா துவக்கி வைத்து பேசுகையில், பழங்குடியின மக்கள் அரசுத்துறை அதிகாரிகள் கூறும் தகவல்களை கேட்டு, அதற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள முன் வர வேண்டும். அப்போது தான் வாழ்வில் முன்னேற முடியும், என்றார்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன் தலைமை வகித்து பேசியதாவது:
பழங்குடியினர் பெற்றோர் தங்களையும் தங்கள் சுற்றுப்புறங்களையும் துாய்மையாக வைத்து கொள்வதன் மூலம், உடல் சார்ந்த நோய் மற்றும் பிரச்னைகளில் இருந்து தற்காத்து கொள்ள இயலும். மேலும், இளவயது திருமணம் செய்வதன் மூலம், தாய் சேய் இருவரும் பாதிக்கப்பட்டு, சமுதாயம் பாதிக்கும் சூழலை உருவாக்கும். இதுபோன்ற திருமணங்களை செய்பவர்கள் மற்றும் அதற்கு துணை நிற்பவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கும்.
எனவே, திருமண வயதுவரும் வரை தங்கள் குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் முன்வந்தால் மட்டுமே, அனைத்து வழிகளிலும் சமுதாயம் முன்னேற்றம் காணும்.
அதேபோல், ஊட்டச்சத்து குறைபாடு களைய, ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ளவும், அரசு மூலம் வழங்கப்படும் ஊட்டச்சத்து மருந்துகளை உட்கொள்ளவும் முன் வர வேண்டும். அரசு திட்டங்கள் பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள, அரசு அதிகாரிகளை நாடி தீர்வு காணலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம், சுற்றுப்புறங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது, தன் சுத்தம் பேணுவது குறித்து விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியில், குடும்ப கட்டுப்பாடு வட்டார மேற்பார்வையாளர் நடராஜ், சுகாதார ஆய்வாளர் பரணி, பழங்குடியின மக்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் பங்கேற்றனர்.