நிப்ட்-டீ கல்லுாரிக்கு ஏ - பிளஸ் தரச்சான்று! சாதனை படைக்கும் பின்னலாடை தொழில்துறை
நிப்ட்-டீ கல்லுாரிக்கு ஏ - பிளஸ் தரச்சான்று! சாதனை படைக்கும் பின்னலாடை தொழில்துறை
UPDATED : மே 23, 2025 12:00 AM
ADDED : மே 23, 2025 11:12 AM
திருப்பூர்:
திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு, தொழில் சார்ந்த கல்வி மிகமிக அவசியம் என்பதை ஏற்றுமதியாளர்கள் உணர்ந்தனர். எதிர்காலத்தில், தொழிலை பக்குவமாக கொண்டு செல்லும் திறனுடைய இளைஞர்களை உருவாக்கும் முயற்சியாக, 1997 ல், முதலிபாளையத்தில், நிப்ட்-டீ கல்லுாரி துவங்கப்பட்டது.
பின்னலாடை வடிவமைப்புக்கான பிரத்யேக பயிற்சியுடன், பாரதியார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில், பட்டப்படிப்புகளும் உள்ளன. தற்போது, இளநிலை பட்டப்படிப்பு -10, முதுகலை படிப்பு -இரண்டு, ஆராய்ச்சி நிலை கல்வி மூன்று என, 15 வகையான படிப்புகளும், பிரத்யேக தொழில்நுட்ப பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
புதிய தொழில்முனைவோரை உருவாக்க, மத்திய அரசின், அடல் இன்குபேஷன் மையத்தையும் கல்லுாரி ஏற்று நடத்தி வருகிறது. திருப்பூரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ள, டிசைன் ஸ்டுடியோவும், அமைக்கப்படுகிறது. இதனால், மாணவ, மாணவியர், அடல் இன்குபேஷன் மையம், பேஷன் ஸ்டுடியோ போன்ற தளங்களிலும் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், நாக் கமிட்டி, ஜன., மாதம் நிப்ட்-டீ கல்லுாரியில் ஆய்வு நடத்தி சென்ற நிலையில், முதல் முயற்சியிலேயே, ஏ பிளஸ் என்ற உயரிய தரச்சான்றிதழ், நிப்ட்-டீ கல்லுாரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
முழுமையானதொழில் கல்வி
நிப்ட்-டீ கல்லுாரியின் வழிகாட்டி ஆலோசகர் ராஜா சண்முகம் கூறியதாவது:
பின்னலாடை தொழிலுக்கென்றே உருவான நிப்ட்-டீ கல்லுாரி, 27 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
ஒட்டுமொத்த திருப்பூரும் பெருமைப்படும் வகையில் பின்னலாடைத்துறையில், நாட்டிலேயே முதன்முதலாக, ஏ பிளஸ் தரச்சான்று பெற்ற கல்லுாரி என்ற பெருமையை பெற்றுள்ளது. உச்சபட்ச தரச்சான்று பெற்றுள்ளதால், திருப்பூரின் ஏற்றுமதியாளருக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், தன்னாட்சி கல்லுாரி என்ற அந்தஸ்தை பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த சில ஆண்டுகளுக்கு பிறகு, நிகர்நிலை பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தவும், கல்லுாரி நிர்வாகம் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும்.
இந்தியாவில் பின்னலாடை துறைக்கான, பிரத்யேகமான பல்கலை என்ற பெருமையை பெறும். நாக் கமிட்டி வாயிலாக, ஏ- பிளஸ் சான்றிதழ் பெற்றது, அடல் இன்குபேஷன் மையம், அசுர வளர்ச்சிக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் பெற்ற கல்லுாரியாக உயரும்.
படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தொழில்சார்ந்த கல்வியை முழுமையான ஈடுபாடுடன் பயிற்சி அளித்து, தொழில் வல்லுனர்களாகவும், தொழில் முனைவோர்களாக உருவாக்குவதும், கல்லுாரி நிர்வாகத்தின் முக்கிய குறிக்கோள்; அதை நோக்கியே, வெற்றிகராக பயணித்து வருகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.