தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வகுப்பறைக்கு வெளியேயும் ஒரு பாடம்

வகுப்பறைக்கு வெளியேயும் ஒரு பாடம்

வகுப்பறைக்கு வெளியேயும் ஒரு பாடம்


UPDATED : ஆக 27, 2026 07:49 PM

ADDED : ஆக 27, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2026 07:49 PM ADDED : ஆக 27, 2026 07:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
ஒரு காலத்தில் புத்தகப் பையின் எடையைக் குறைப்பதே, சுமையற்ற கல்வி என பேசப்பட்டது. இன்று, கணினித் திரையில் வரலாற்றை உயிர்ப்பித்துக் காட்டும் தொழில்நுட்பமும், கடினமான பாடங்களை எளிதாகப் புரிய வைக்கும் செயற்கை நுண்ணறிவும் பள்ளிக் கல்விக்குள் நுழைந்து கொண்டிருக்கின்றன.

திருப்பூர் மாவட்ட அரசுப் பள்ளிகளிலும் கணினி வழிக் கற்றலுக்கு வரவேற்பு உள்ளது. அதே நேரத்தில், மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே சென்று, வாழ்க்கையையும் சுற்றுச்சூழலையும் நேரில் கற்கும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திரையில் ஒரு உலகம்


அரசுப் பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகங்கள் வழியாக, வரலாற்று நிகழ்வுகள் முதல் சிக்கலான அறிவியல் பாடங்கள் வரை காணொளி வடிவில் விளக்கப்பட்டு வருகின்றன. புத்தகத்தில் சில வரிகளாக இருக்கும் ஒரு நிகழ்வு, திரையில் காட்சியாக விரியும் போது மாணவர்களுக்கு புரிதல் எளிதாகிறது.

அதே போல், அன்றைய பாடவேளைக்கு தேவையான புத்தகங்களை மட்டுமே மாணவர்கள் கொண்டு வர அறிவுறுத்தப்படுகின்றனர். மாற்று வகுப்பு நேரங்களில் வரைபடம், படைப்பாற்றல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கும் இடம் அளிக்கப்படுகிறது.

கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வழிக் கற்றலும், தற்போதைய காலகட்டத்துக்கு தேவையான மாற்றமாகவே ஆசிரியர்கள் கருதுகின்றனர். இருப்பினும், திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்த பிறகே அதன் செயல்பாடு மற்றும் பயன்களை மதிப்பிட முடியும் என்கின்றனர்.

ஏ.ஐ., திறக்கும் புதிய வகுப்பறை


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம், கடினமான பாடங்களையும் மாணவர்களுக்கு எளிதாக விளக்க முடியும். வரலாற்றை காட்சியாகவும், அறிவியல் கருத்துகளை புரியும் வகையிலும் கொண்டு செல்லும் வாய்ப்பு உருவாகிறது.

கணினித் திரை அறிவை விரிவுபடுத்தலாம்; ஆனால், அதனுடன் அனுபவக் கல்வியும் இணைந்தால் கற்றல் இன்னும் முழுமையடையும் என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.

'புத்தகமில்லா கற்றல்' நாட்களில் விளையாட்டு மற்றும் படைப்பாற்றல் திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு விளையாட்டு நேரம் பல பள்ளிகளில் குறைவாகவே உள்ளது.

இதற்கிடையில், சுற்றுச்சூழலை நேரில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நஞ்சராயன் குளம், ஆண்டிப்பாளையம் குளம், நொய்யல் ஆறு உள்ளிட்டவை, திருப்பூரின் இயற்கைப் பாடப் புத்தகங்களாகவே உள்ளன. நீர்நிலைகளை பாதுகாப்பது, குப்பையை தரம்பிரிப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டின் பாதிப்பு போன்றவற்றை மாணவர்கள் நேரில் அறிய தன்னார்வ அமைப்புகளும் தயாராக உள்ளன.

குப்பை மேலாண்மை குறித்து வகுப்பறையில் கற்பிப்பதற்கும், குப்பை குவிந்திருக்கும் இடத்தை நேரில் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. அதேபோல், நொய்யல் பாதுகாப்பு பற்றி படிப்பதற்கும், அதன் கரையில் நடக்கும் துாய்மைப் பணியில் பங்கேற்பதற்கும் அனுபவ வேறுபாடு இருக்கிறது.

ஆனால், இத்தகைய களப்பயணங்களுக்கு அனுமதி பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் காரணமாக, மாணவர்களை அழைத்துச் செல்ல ஆசிரியர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது.

நேரில் கற்றால்... நெஞ்சில் நிற்கும்


ஒரு குளத்தைப் பற்றி புத்தகத்தில் படிப்பதைவிட, அதன் கரையில் நின்று நீரின் நிலையைப் பார்ப்பது வேறு அனுபவம்.

குப்பையை தரம்பிரிப்பது குறித்து பாடம் கேட்பதைவிட, அந்தப் பணியில் நேரடியாக பங்கேற்பது மாணவர்களின் மனதில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும்.

புத்தக அறிவுடன், வாழ்க்கை அனுபவத்தையும் இணைக்கும் களப்பயணங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

'துப்புரவாளன்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பத்மநாபன் கூறுகையில், ''விழிப்புணர்வு நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கேற்பதை முற்றிலுமாகத் தவிர்ப்பது, அவர்களின் சமூக அறிவை வளர்க்கும் வாய்ப்பை குறைத்துவிடும்.

''தனியார் பள்ளி மாணவர்கள் பாலிதீன் உள்ளிட்ட கழிவுகளை சேகரித்து வழங்கி வருகின்றனர். இதுபோன்ற செயல்பாடுகளை அரசுப் பள்ளி மாணவர்களிடமும் விரிவுபடுத்த முடியும்.

''நம்பகமான தன்னார்வ அமைப்புகளை கல்வித்துறை அடையாளம் கண்டு, பெற்றோர் ஒப்புதல் மற்றும் ஆசிரியர்களின் கண்காணிப்புடன் பாதுகாப்பான களப்பயணங்களுக்கு முன் அனுமதி வழங்க வேண்டும். இதற்கான தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் உருவாக்க வேண்டும்,'' என்றார்.

செயற்கை நுண்ணறிவு மூலம் உலகத்தையே ஒரு திரையில் கொண்டு வந்து மாணவர்களுக்குக் காட்டும் காலம் இது. அதே நேரத்தில், அவர்கள் வாழும் நகரம், அதன் நதி, குளம், மரம் மற்றும் சுற்றுச்சூழலையும் நேரில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் வேண்டும்.

ஏ.ஐ., ஒரு புதிய உலகத்தைத் திறக்கலாம்; ஆனால், மாணவர்கள் வாழும் உலகத்தை அறிய, வகுப்பறைக்கு வெளியேயும் கல்விக்கான கதவு திறக்கப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us