மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கி அசத்தும் நடுநிலைப் பள்ளி
மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கி அசத்தும் நடுநிலைப் பள்ளி
UPDATED : மார் 08, 2026 11:53 AM
ADDED : மார் 08, 2026 11:55 AM
கிராமப்புற மாணவர்களை சாதனையாளர்களாக, உருவாக்கி, அனைத்து தரப்பினரையும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி கவர்ந்து வருகிறது.
பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் கிராமத்தில் கடந்த, 1929ல் அயல் என்பவரால், ஓராசிரியர் கொண்ட திண்ணை பள்ளியாக மணிமேகலை அரசு உதவிபெறும் பள்ளி துவங்கப்பட்டது.
தொடர்ந்து கடந்த, 1939ல், 5ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளியாக உயர்ந்தது. பின்னர் கடந்த, 1942ல் செல்லமுத்து என்பவரின் முயற்சியால் இப்பள்ளி நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த, 1970ல், 8ம் வகுப்புகளுக்கு 8 ஆசிரியர்கள் கொண்ட நடுநிலைப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது.
இப்பள்ளி கடந்த, 97 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறது. தற்போது, அருள்மொழி என்பவர், மேலாண்மை செய்து வருகிறார்.
இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் உள்ளனர்.
இப்பள்ளிக்கு சுற்றியுள்ள வெண்கரும்பூர், காரையூர் ஆகிய கிராமங்களில் இருந்து வந்து மாணவர்கள் படித்துச் செல்கின்றனர். மேலும், இப்பள்ளி மாணவர்கள் கலை, இலக்கியம், ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட போட்டிகளில் குறுவட்டம், மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.
திறனறி தேர்விலும் இப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் இப்பள்ளிக்கு ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
அடிப்படை கல்வியில் சிறந்து விளங்குவது நோக்கம்
நான் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றேன். கிராமப்புற மாணவர்கள் நகர பகுதிகளுக்கு செல்லக்கூடாது என்ற நோக்கத்தில் கற்றல் திறனை அதிகரித்து, மாணவர்கள் அடிப்படை கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்ற நோக்கத்தில் இருந்து வருகிறோம். கிராமப்புற மாணவர்களை கல்வியில் சாதனை படைக்க வைப்பதே ஆசிரியர்களாகிய எங்களது லட்சியம்.
- செல்வராஜ், தலைமை ஆசிரியர்.
மாணவர்கள் சேர்க்கைக்கு விழிப்புணர்வு
இப்பள்ளியில் தற்போது, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர் சேர்க்கைக்கு பெற்றோரிடம், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன், சங்கம் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறோம். விரைவில் இப்பள்ளி, நுாற்றாண்டை தொட உள்ளது. இப்பள்ளிக்கு உள்ளூர், வெளியூர்களில் இருந்து மாணவர்கள் வந்து படிக்கின்றனர்.
- வசந்தராஜ், பெண்ணாடம் லயனஸ் கிளப் தலைவர்.
கல்வியில் சிறந்து விளங்க வைப்பதே லட்சியம்
இப்பள்ளி உதவி பெறும் நடுநிலைப் பள்ளியாக இருந்தாலும் இப்பகுதி மக்கள் தங்களின் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்க பெற்றோர் விரும்புகின்றனர். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க ஆசிரியர்கள் லட்சியமாக இருந்து வருகின்றனர். இப்பள்ளிக்கு, எங்கள் கிராம மக்களே ஒருங்கிணைந்து மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறோம்.
- வினோத்குமார், பா.ம.க., மாவட்ட துணை செயலாளர்.

