கல்வி ஆராய்ச்சியை மேம்படுத்தும் அருங்காட்சியகம்! திருப்பூரில் அமைக்கப்படுமா
கல்வி ஆராய்ச்சியை மேம்படுத்தும் அருங்காட்சியகம்! திருப்பூரில் அமைக்கப்படுமா
UPDATED : மே 24, 2024 12:00 AM
ADDED : மே 24, 2024 11:48 AM

திருப்பூர்:
டாலர்களில் பணப் பரிவர்த்தனை நடக்கும் ஆடை தொழில் நகரம் என்ற பிரதான பெருமையை கொண்டுள்ள திருப்பூர், தமிழ் நாகரிகம் துவங்கிய காலம் தொட்டு, படிப்படியான நாகரிக மாற்றத்தை கண்ட தொல்லியல் நகரங்களின் வரிசையிலும் இடம் பெற்றிருக்கிறது என்பது தமிழ் உலகம் போற்றும் மற்றொரு பெருமை.
மாவட்டம் முழுக்க ஆங்காங்கே தென்படும் தொல்லியல் எச்சங்களும், மிச்சங்களும், 2,500 ஆண்டுக்கு முந்தைய நாகரிகத்தின் அடையாளமாக இருக்கின்றன. மாவட்டம் உருவாக்கப்பட்டு, 15 ஆண்டுகள் கடந்தும், தொல்லியல் துறைக் கென, அலுவலகம் உருவாக்கப்படவில்லை; அலுவலர்களும் நியமிக்கப்படவில்லை, திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பழமையான கோவில்கள், வரலாற்றுச் சின்னங்கள் அதிகளவில் உள்ளன. அமராவதி ஆற்றங்கரை, நொய்யல், கவுசிகா நதிக்கரையில் மக்கள் வாழ்ந்த தற்கான பழமையான தொல்லியல் சின்னங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.
பல நுாற்றாண்டு களுக்கு முற்பட்ட கல்வெட்டுகள், பெருங்கற்காலத்தை சேர்ந்த கல் திட்டைகள், அக்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆபரணங்கள், பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்தகைய தொல்லி யல் பொருட்கள், கோவை உள்ளிட்ட பிற ஊர்களில் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கண்முன் தெரியும் பெரும் பாலான கல்வெட்டுகள், நடுகற்கள் மற்றும் சிற்பங்களை சேதமடைந்தும் கிடக்கின்றன.
சமூக வளர்ச்சியில், அருங்காட்சியகங்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலும், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், சர்வதேச அருங்காட்சியக பேரவையால், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாக வைத்து, இந்நாள் கொண்டாடப்படும் நிலையில், இந்தாண்டின் கருப்பொருளாக கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அருங்காட்சியகங்கள் என்ற தலைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்!
கீழடி ஆய்வுக்கு பின், தொல்லியல் துறையை தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. திருப்பூரில், கண்டிப்பாக அரசு சார்பில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். மாவட்டத்தின் பல இடங்களில், பழங்கால பொருட்கள் கல் துாண்கள், கல் திட்டைகள் காணக் கிடைக்கின்றன. பழங்கால மக்களின் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்வதற்கான பல அடையாளங்கள் இங்கு உள்ளன. இவை, வரலாறு மற்றும் தொல்லியல் சார்ந்த பாடம் படிக்கும் மாணவ, மாணவியருக்கு பயனளிக்கும் என எல்.ஆர்.ஜி., அரசு கல்லுாரி வரலாற்று பேராசிரியர் டாக்டர் கருப்பையா கூறியுள்ளார்.
கல்வெட்டுகளை பாதுகாக்க வேண்டும்!
போதிய விழிப்புணர்வு இல்லாமல் சேதப்படுத்தப்பட்டு வரும், கல்வெட்டு, சிலைகள், சிற்பங்களை பாதுகாக்க, மாவட்டத்துக்கென தனியாக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். தொல்லியல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். கண்டெடுக்கப்படும் தொல்லியல் எச்சங்கள் மற்றும் மிச்சங்களை அருங்காட்சியகத்தில் வைத்து பராமரிப்பதன் வாயிலாக, திருப்பூருக்கு, சுற்றுலா முக்கியத்துவமும் கிடைக்கும். ஏராளமான இடங்களில் தொல்லியல் சார்ந்த அடையாளங்கள் அவ்வப்போது கண்டறிந்து வருகிறோம். அத்தகைய இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் வீர ராஜேந்திரன் ரவிக்குமார் கூறியுள்ளார்.
தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்பது, வரலாற்று ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்களின் தொடர் கோரிக்கையாக உள்ளது.
- நமது நிருபர் -