சொந்த செலவில் அரசு பள்ளிக்கு வர்ணம் பூசிய உடற்கல்வி ஆசிரியர்
சொந்த செலவில் அரசு பள்ளிக்கு வர்ணம் பூசிய உடற்கல்வி ஆசிரியர்
UPDATED : அக் 06, 2024 12:00 AM
ADDED : அக் 06, 2024 09:39 AM
கர்நாடகா:
கர்நாடகாவில் மாணவர்களை கவர்ந்து இழுக்க, சில அரசு பள்ளி ஆசிரியர்கள், தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெலகாவி மாவட்டத்தின் அரசு பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் வீரண்ணா மடிவாளர் என்பவர் சொந்த செலவில் பள்ளிக்கு வர்ணம் பூசி உள்ளார்.
அவர், பெருமையாக கூறியதாவது:
எனது சொந்த ஊர் பெலகாவியின் ராய்பாக் கிராமம். அரசு பள்ளியில் படித்தேன். நான் அரசு பள்ளியில் படித்த காலத்திலேயே, எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. கஷ்டப்பட்டு படித்து, உடற்கல்வி ஆசிரியர் ஆனேன்.
ராய்பாக்கின் நிடகுந்தி கிராமத்தில் உள்ள, அரசு கன்னட பள்ளியில் 2019ல் பணிக்கு சேர்ந்தேன். நான் முதல்முறை பள்ளிக்கு சென்றபோது, மாணவர்களுக்கான எந்த அடிப்படை வசதியும் இருக்கவில்லை. நானும் மாணவராக இருந்தபோது அனுபவித்த சூழ்நிலையை, மாணவர்கள் அனுபவித்தனர்.
பள்ளியில் மாற்றம் கொண்டு வர நினைத்தேன். இதுபற்றி சக ஆசிரியர்களிடம் கூறியபோது, எதற்கு இந்த வேண்டாத வேலை என்று என்னிடம் கேட்டனர். மாணவர்கள் நல்ல சூழ்நிலையில் கல்வி கற்க வேண்டும் என்று கூறினேன். எனது கருத்தை யாரும் கேட்கவில்லை.
சக ஆசிரியர்களை நம்பி பயன் இல்லை என்று தெரிந்தது. இதனால் எனது சம்பளத்தில் ஒரு பகுதியை, பள்ளியை சீரமைக்க ஒதுக்கி வைத்தேன். மாணவர்களுக்கு பிடித்த மாதிரி, பள்ளியின் சுவரில் வர்ணம் பூசினேன்.
தேச தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், நாடுகளின் சின்னங்கள் உட்பட பல விஷயங்களை, பள்ளி சுவரில் வர்ணம் பூசப்பட்டு உள்ளது.
மாணவர்கள் துாங்கும் போது, அவர்களின் கனவில் கூட, பள்ளியை பற்றிய எண்ணம் தான் வர வேண்டும். இப்போது எங்கள் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகளும் உள்ளது. மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி கற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.