UPDATED : மார் 30, 2024 12:00 AM
ADDED : மார் 30, 2024 11:31 AM

சென்னை:
அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைன் வழி பாடம் நடத்த, ஆசிரியர்களுக்கு 45,000 டேப்லெட் எனும் கையடக்க கணினி வழங்கும் பணி துவங்கியுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஹைடெக் லேப் என்ற, கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் வழியே, மாணவர்களுக்கு ஆன்லைன் வழி பாடங்கள், ஆசிரியர்களுக்கான ஆன்லைன் வழி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அதேபோல், அரசு தொடக்கப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி பாடம் நடத்தவும், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் வசதியாக, டேப்லெட் என்ற கையடக்க கணினி வழங்கப்படுகிறது.
மொத்தம் 45,000 கையடக்க கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்ட வாரியாக கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பும் பணி துவங்கியுள்ளது. இதனை கொண்டு, ஆசிரியர், மாணவர் வருகைப்பதிவு, ஆசிரியர்களுக்கான பணி பயிற்சி, மாணவர்களுக்கு வீடியோ பாடங்களை காட்டுவது மேற்கொள்ளப்பட உள்ளன.
இது திருட்டு போனால், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை எச்சரித்துள்ளது.