அரசு பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைக்க உதவிய பள்ளி ஆசிரியர்
அரசு பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைக்க உதவிய பள்ளி ஆசிரியர்
UPDATED : மே 30, 2024 12:00 AM
ADDED : மே 30, 2024 10:00 AM

கூடலுார்:
கூடலுாரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர், தன் இரு பெண் குழந்தைகள் படிக்கும், ஊராட்சி பள்ளியின் சுற்றுச் சுவரின் மேற்பகுதியில் பாதுகாப்பு தடுப்பு அமைத்து கொடுத்துள்ளார்.
கூடலுார் தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருபவர் கிருஷ்ணகுமார். இவர் மனைவி ரேவதி, கோழிப்பாலம் ஊராட்சி ஒன்றியம் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர்களின் முதல் பெண் குழந்தை நிகரிலி, 2018--19; இரண்டாவது பெண் குழந்தை மகிழினி, 2022 ஆண்டு கல்வியாண்டில், கூடலுார் வண்டிபேட்டை ஊராட்சி பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார்.
குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்த போது சீர்வரிசையுடன், பள்ளிக்கு தேவையான பல தளவட பொருட்களையும் வழங்கினார். தொடர்ந்து, பள்ளிக்கு தேவையான உதவிகளை அவ்வப்போது செய்து வருகிறார். தற்போது, நிகரிலி, 6ம் வகுப்பு, மகிழினி, 3ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளியின் சுற்றுச் சுவர் உயரம் குறைவாக இருப்பதால் மாணவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இதனை உயர்த்தி தர வேண்டும் என அவரிடம் பள்ளி சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதனை ஏற்று, 35 ஆயிரம் ரூபாய் செலவில் இரும்பு மற்றும் தகரம் பயன்படுத்தி தடுப்பு சுவரை உயர்த்த உதவியுள்ளார்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வரும் தற்போதைய சூழலில், ஆசிரியர் கிருஷ்ணகுமார் தம்பதி, தங்கள் இரு பெண் குழந்தைகளையும் அரசு பள்ளியில் சேர்த்து, பள்ளிக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருவதை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.