தனியாரிடம் பள்ளி சீருடை தைக்கும் பணி மகளிர் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
தனியாரிடம் பள்ளி சீருடை தைக்கும் பணி மகளிர் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
UPDATED : மே 30, 2024 12:00 AM
ADDED : மே 30, 2024 09:58 AM

சிவகங்கை :
பள்ளி சீருடைகள் தைக்கும் பணியை மகளிர் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்காமல் தனியாருக்கு வழங்குவதை கண்டித்து சிவகங்கையில் அச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பள்ளியில் படிக்கும் 1 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கான சீருடை தைக்கும் பணியை அந்தந்த பகுதி மகளிர் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்திடம் ஒப்படைத்து வந்தனர்.
அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, குன்றக்குடி, மறவமங்கலத்தில் உள்ள மகளிர் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கி தைத்து, அதற்கான சம்பளத்தை சங்கத்திற்கு சமூக நலத்துறை வழங்கி வந்தது.
இந்நிலையில் இனி வரும் காலங்களில் பள்ளி சீருடை தைக்கும் பணியை தனியாரிடம் விட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.கல்வித்துறையின் இந்த முடிவால் மாவட்ட அளவில் உள்ள 4 சங்கங்களை சேர்ந்த 2 ஆயிரம் மகளிர் தையல் பணியின்றி தவிக்கும் நிலை ஏற்படும்.
இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு மகளிருக்கு ரூ.40 ஆயிரம் வருவாய் பாதிக்கப்படும். எனவே மகளிர் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கே தொடர்ந்து பள்ளி சீருடை தைக்கும் பணியை வழங்கவேண்டும் என வலியுறுத்தி நேற்று சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கை மகளிர் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்க முன்னாள்தலைவர் சரஸ்வதி தலைமை வகித்தார். குன்றக்குடி தலைவர் பாண்டிமீனாள் முன்னிலை வகித்தார். சங்கத்தை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மகளிர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ரூ.40,000 வருவாய் இழப்பு: சங்க முன்னாள் தலைவர் சரஸ்வதி கூறுகையில், ஏற்கனவே தைக்க கொடுத்த 5,000 துணிகளை திரும்ப பெற்று விட்டனர். இனிமேல் மகளிர் தையல் தொழிலாளர் சங்கத்திற்கு துணி வழங்காவிடில், முதல்வர் ஸ்டாலினை நேரடியாக சந்தித்து புகார் அளிக்க உள்ளோம்.
கல்வித்துறையின் இந்த முடிவால் ஒவ்வொரு மகளிரும் ஆண்டுக்கு பெறும் வருமானம் ரூ.40 ஆயிரத்தை இழக்கும் நிலை ஏற்படும் என்றார்.
கல்வித்துறை நடவடிக்கை
இது குறித்து சமூக நலத்துறை அதிகாரி கூறுகையில், பள்ளி சீருடைகளை தாங்களே தைத்துக்கொள்வதாக, கல்வித்துறை தெரிவித்துவிட்டது. அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்நடைமுறை வரும். இந்த கல்வி ஆண்டிற்கான துணிகளை தைத்து கொடுத்து விட்டனர் என்றனர்.