பழங்கால பொருட்களின் அருங்காட்சியகம் பொக்கிஷமாக பாதுகாக்கும் பொம்மை காதலன்
பழங்கால பொருட்களின் அருங்காட்சியகம் பொக்கிஷமாக பாதுகாக்கும் பொம்மை காதலன்
UPDATED : ஏப் 09, 2024 12:00 AM
ADDED : ஏப் 09, 2024 11:03 AM

காரைக்குடி:
காரைக்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் பழங்கால பொருட்களை பொக்கிஷமாக பாதுகாத்து அதனை கொடைக்கானல் மற்றும் காரைக்குடியில் அருங்காட்சியமாக மாற்றி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் செல்லப்பா நகரை சேர்ந்தவர் ஜி.ஆர்.மகாதேவன். இருசக்கர வாகன டீலரான இவர் பழமையான பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவர்.
பழங்கால ரேடியோ, கிராமபோன், பீங்கான் பொம்மை, வெளிநாட்டு விலை உயர்ந்த பழங்கால பொம்மைகள், பாத்திரங்கள், செட்டிநாட்டு சீர் வரிசைகள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், விளம்பரப் பலகைகள், செய்தித்தாள்கள் ,பழங்கால அடுப்புகள், கார்கள், கை ரிக் ஷா என ரூ.5 லிருந்து பல கோடி மதிப்பிலான பழமையான பொருட்களை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார். முதலில், தனது வீட்டை அருங்காட்சியமாக வைத்திருந்தவர், பொருட்கள் வைக்கப் போதிய இடம் இல்லாமல் திண்டாடினார். அதன் வெளிப்பாடு இன்று சுற்றுலா பயணிகள் உட்பட அனைவரும் வியந்து பார்க்கும் அருங்காட்சியமாக இவரது வீடு மாறியுள்ளது.
ஜி.ஆர்.மகாதேவன் கூறும்போது:
சிறுவயதில் விரும்பிய பொம்மைகள் வாங்க வேண்டும் என்று ஆசை அனைவருக்கும் இருக்கும்.எனக்கும் இருந்தது.சம்பாதிக்க தொடங்கிய பிறகு நான் இழந்த பொருட்களை மீண்டும் வாங்க வேண்டும் என்ற எண்ணமே இதற்கு அடித்தளம்.25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளது. 1940 முதல் 1980 வரையிலான அனைத்து பொருட்களும் உள்ளது.14 வருடத்தில் இவ்வளவு பொருட்களை சேமித்து வைத்துள்ளேன்.
இதற்கு முக்கிய காரணம் என் மனைவி பிரியதர்ஷினி தான். பொருட்களை நான் வாங்கி வருவதோடு சரி அதை முறையாக பராமரிப்பது காட்சிப்படுத்துவது அவர் தான். ரூ. 8 ஆயிரத்தில் தொடங்கி ஒரு லட்சம் மதிப்பிலான பொம்மைகள் உள்ளன. எனது, பழங்கால பொருட்கள் சேகரிப்பை அனைவரும் பார்த்திடும் வகையில் கொடைக்கானலில் அருங்காட்சியகம் அமைத்துள்ளேன்.
காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர்களும் பார்த்து ரசித்து வியக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காரைக்குடியிலும் பொம்மை காதலன் என்ற அருங்காட்சியகம் அமைத்துள்ளேன். பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் இலவச அனுமதி வழங்க உள்ளோம் என்றார்.