UPDATED : ஜூன் 05, 2025 12:00 AM
ADDED : ஜூன் 05, 2025 04:02 PM

 சென்னை: 
தமிழகத்தின் கல்வராயன் மலையை சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி சென்னை ஐ.ஐ.டி.,யில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சேலத்தில் இருந்து சுமார் 65 கி.மீ., தூரத்தில் கல்வராயன் மலை உள்ளது. இங்கு வசித்து வந்த கருமந்துறை பழங்குடியினத்தை சேர்ந்த ஆண்டி, கடந்தாண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு ஜெகதீஸ்வரி, ராஜேஸ்வரி, பரமேஸ்வரி ஆகிய 3 மகள்களும், ஸ்ரீ கணேஷ் என்ற மகனும் உள்ளனர்.
இதில், ராஜேஸ்வரி பொறியியல் பட்டப்படிப்பு படிக்க விரும்பினார். இவர் பெருந்துறையில் அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்றார். இதில் மாணவி ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 417வது இடத்தை பிடித்தார். தற்போது, ராஜேஸ்வரி ஐ.ஐ.டியில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கல்வராயன் மலையில் செயல்படும் இந்த பள்ளியில் இருந்து ஐ.ஐ.டி. படிக்க தகுதி பெற்ற முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்றுள்ளார். இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மூன்றாவது குழந்தையாக ராஜேஸ்வரி, அரசு பழங்குடியினர் குடியிருப்புப் பள்ளியிலிருந்து ஐ.ஐ.டியில் படிக்கும் சாதனையை பார்த்து மகிழ்ந்து இருப்பார் என ஆண்டி மனைவி கவிதா தெரிவித்தார். ராஜேஸ்வரி 10ம் வகுப்பில் 438/500 மற்றும் 12ம் வகுப்பில் 521/600 மதிப்பெண்கள் பெற்றார்.
தற்போதைய சாதனை குறித்து ராஜேஸ்வரி கூறியதாவது: 
தன்னை வழிநடத்தியதற்காக தனது ஆசிரியர்களுக்கு நன்றி. என் உடன்பிறப்புகள் படிப்பில் சிறந்தவர்கள், ஆனால் ஜே.இ.இ., தேர்வு பற்றி அவர்களுக்குத் தெரியாது.
என் ஆசிரியர்கள் எனக்கு ஆதரவளித்தனர். இந்த சாதனை மேலும் பழங்குடியின மாணவர்கள் பெரிய கனவுகளைக் காண ஊக்குவிக்கும். சாதிக்க இங்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. 
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் வாழ்த்து
ராஜேஸ்வரிக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் Salute! அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் ஐஐடி-க்கு உண்மையான பெருமையாக அமையும்! அதற்காக நமது திராவிட மாடல் அரசு தொடர்ந்து உழைக்கும். இவ்வாறு அந்த பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை:
சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தை சேர்ந்த செல்வி. ராஜேஸ்வரி, 12ம் வகுப்பில் 521 மதிப்பெண்களும், ஜேஇஇ தேர்வில் இந்திய அளவில் 417-வது இடத்தையும் பிடித்து, சென்னை ஐஐடி.,யில் இடம் கிடைத்துள்ள செய்தி கேட்டு மகிழ்வுற்றேன். மாணவி ராஜேஸ்வரிக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்.
தனது தந்தையாரை கடந்த 2024-ல் புற்றுநோயால் இழந்த நிலையிலும், ராஜேஸ்வரி உழைத்து பெற்றுள்ள இந்த வெற்றி மெச்சத்தக்கது.கல்வி ஒன்றே சமூக முன்னேற்றத்தின் வழி. மாணவி ராஜேஸ்வரி உயர்கல்வியிலும் சிறக்க வாழ்த்துகிறேன். அவரது பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டு, மாணவி ராஜேஸ்வரியின் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், மாணவி ராஜேஸ்வரிக்கான படிப்பு செலவுகளை அதிமுக ஏற்கும். 
இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

